அநுர அரசாங்கத்தின்‘பல் குத்திக் கரணம்’!

அநுர அரசாங்கத்தின்‘பல் குத்திக் கரணம்’!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும் என மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியின் ‘அந்தப் பல்’ குத்திக் கரணம் அடித்துப்போய்விட்டது.

அந்தச் சட்டத்தை மாற்றியக்கும் பெயரில் அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் ‘பயங்கரவாதத் தடுப்பு வரைவு’ உள்ளடக்கம், சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்ட சேவையாக இருந்தாலும், அதன் அடிப்படை நோக்கம் அதேபோலவே நீடிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் விசேட அறிக்கையாளர் எழுப்பி வரும் தொடர்ச்சியான விமர்சனங்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பு உள்ளிட்ட பல விடயங்கள், இந்த சட்டம் மீண்டும் மக்கள் மீது அடக்குமுறையாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

பயங்கரவாதத்தை ஒழிப்பதுடன் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் பென்எமர்சன் அவர்கள் 2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அரசியல் நோக்கங்களுக்காகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிறுபான்மையினரை அடக்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். இதனால் பலர் ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சட்டம் அரசியலாக்கப்பட்ட விதம் காரணமாக அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு கூறியுள்ள ஐ.நா. விசேட அறிக்கையாளர்,

★ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்து, சர்வதேச மனித உரிமை தரநிலைகளுக்கு ஒத்த புதிய சட்டமொன்றை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

★ தற்போதைய வரைவு சட்டத்தில் “பயங்கரவாதம்” என்ற பதத்திற்கு வழங்கப்பட்டுள்ள வரையறை மிகவும் பரந்ததாகவும், தெளிவற்றதாகவும் இருப்பதால், அரசியல் எதிர்ப்புகளை ஒடுக்க பயன்படுத்தப்படும் அபாயம் காணப்படுகின்றது.

★ இச்சட்டம் வழியாக பாதுகாப்பு காரணம் என்ற பெயரில் மக்கள் மீது கண்காணிப்பு, கைது, விசாரணை, தடுப்பு நடவடிக்கைகள் எளிதாக்கப்படுகின்றன.

★ குறிப்பாக, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் எதிரணியினருக்கு இது பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

★ இதன் மூலம் ஜனநாயகத்துக்கும், சட்டத்தின் ஆட்சி கொள்கைக்கும் பாதிப்பு ஏற்படும்.

எனவே, பயங்கரவாதத்தை எதிர்க்கும் பெயரில், மீண்டும் ஒருமுறை அடக்குமுறைச் சட்டம் கொண்டு வரப்படுவதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய பொறுப்பு அனைத்து குடிமக்களுக்கும் உள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி