கனடாவில் கடந்த ஜனவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 7.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் (Statistics Canada) தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் சற்று வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது நுகர்வோரை கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
பணவீக்க நிலவரம் செவ்வாய்க்கிழமை வௌியிடப்பட்ட அறிக்கையின்படி, கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் ஜனவரி மாதத்தில் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முன்னதாக பொருளாதார நிபுணர்கள் கணித்த 2.4 சதவீதத்தை விடக் குறைவாகும். குறிப்பாக, ஏப்ரல் மாதத்துடன் கார்பன் வரி (Carbon Price) நீக்கப்பட்டமையினால் எரிபொருள் விலைகள் 16.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன. அதேவேளை, வாடகை அதிகரிப்பு வேகம் குறைந்ததன் காரணமாக வீட்டுவசதி செலவுகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாதளவுக்கு வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
உணவு விலையேற்றத்திற்கான காரணங்கள் இவ்வாறான வீழ்ச்சிகள் காணப்பட்ட போதிலும், டிசம்பர் மாதம் 6.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், ஜனவரியில் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கான பிரதான காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன:
உணவகக் கட்டணங்கள்: உணவகங்களில் உணவருந்துவதற்கான செலவு 12.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட வரிச் சலுகை (Tax Holiday) நீக்கப்பட்டமையே இதற்கு முக்கிய காரணமாகும்.
அத்தியாவசியப் பொருட்கள்: மாட்டிறைச்சி மற்றும் கோப்பி (Coffee) ஆகியவற்றின் விலைகள் இரட்டை இலக்க சதவீதத்தில் அதிகரித்துள்ளன.
நாணயப் பெறுமதி வீழ்ச்சி: 2025 ஆரம்பத்தில் கனடிய டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக வரி மோதல்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
அரசியல் ரீதியான அழுத்தங்கள் உணவுப் பொருட்களின் விலையேற்றம் தற்போது கனடிய நாடாளுமன்றத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் எனச் சாடியுள்ளார். இது தொடர்பாகப் பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) கடிதம் எழுதியுள்ள அவர், மக்கள் பட்டினியால் வாடுவதற்கு முன்னர் அரசாங்கம் தனது கொள்கைகளை மீளப் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
எதிர்கால எதிர்பார்ப்பு தற்போது அமெரிக்காவுடனான வர்த்தக வரிகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், அதன் நன்மைகள் நுகர்வோரைச் சென்றடைய மேலும் சில காலம் எடுக்கும் எனப் பொருளாதார நிபுணர் லெஸ்லி பிரஸ்டன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் இதே வேகத்தில் குறைந்தால், கனடிய மத்திய வங்கி தனது வட்டி வீதங்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.