பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் "மிரட்டி பணம் பறித்தல் தடுப்பு விசேட அதிரடிப்படையினரால்" (Anti-extortion Task Force) அடையாளம் காணப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பிரஜைகள் குறித்து, கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையம் (CBSA) பாரிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான புதிய புள்ளிவிபரங்கள் தற்போது வௌியாகியுள்ளன.
கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையத்தின் தகவல்படி, சுமார் 296 நபர்கள் "விசாரணைக்குரிய நபர்களாக" (Persons of Interest) அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 100 ஆக இருந்த நிலையில், தற்போது அது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
இவ்விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
நாடுகடத்தல் உத்தரவு: 32 நபர்களுக்கு எதிராக கனடாவிலிருந்து வௌியேறுமாறு (Removal Order) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடுகடத்தப்பட்டோர்: இதில் 10 பேர் ஏற்கனவே கனடாவிலிருந்து கட்டாயமாக வௌியேற்றப்பட்டுள்ளனர்.
மேன்முறையீடு: மேலும் 9 பேர் குடிவரவு மற்றும் அகதிகள் சபையில் (IRB) விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கும் நாடுகடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒன்டாரியோ, அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற மாகாணங்களில் வசிக்கும் தெற்காசிய மக்கள், குறிப்பாக சீக்கிய சமூகத்தினரை இலக்கு வைத்து இந்த மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தியாவை தளமாகக் கொண்ட குற்ற கும்பல்கள், தொலைபேசி ஊடாக பாரிய தொகையை கப்பமாக கோருவதாகவும், பணம் வழங்க மறுப்பவர்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மாணவர் விசா அல்லது வேலை அனுமதிப் பத்திரத்தில் கனடாவிற்குள் நுழைந்து, பின்னர் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியப் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த பாரிய குற்றச் செயல்களுக்குப் பின்னால் இந்திய சிறையிலிருந்தவாறு இயங்கும் லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) தலைமையிலான கும்பல் இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்கும்பலுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம் என கனடிய பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். முன்னதாக, சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையிலும் இக்கும்பலின் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் ஈபி (David Eby), இந்தச் சம்பவங்களை "நிதானமாக நகரும் பயங்கரவாதத் தாக்குதல்" (Slow-motion terror attack) என வர்ணித்துள்ளார்.
அத்துடன், குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு அகதி அந்தஸ்து கோரி கனடாவில் தங்கியிருக்க முயற்சிக்கும் நபர்களை உடனடியாக நாடுகடத்த சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக யுத்தம் காரணமாக, கனடிய பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுடனான உறவுகளைப் பலப்படுத்த முயற்சிக்கும் வேளையில், இந்தியப் புலனாய்வு அதிகாரிகளின் வருகை கனடிய சீக்கிய அமைப்புகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவுடன் உறவாடுவது "அடக்குமுறைக்குத் துணைபோகும் செயல்" என அவர்கள் விமர்சித்துள்ளனர்.