கடந்த சில நாட்களாக நிலவி வந்த இதமான வானிலை முடிவுக்கு வந்துள்ள நிலையில், ரொறன்ரோ உள்ளடங்கலாக தெற்கு ஒன்டாரியோவின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை முதல் கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை (Freezing Rain) பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கலிபோர்னியாவிலிருந்து நகர்ந்து வரும் பாரிய தாழமுக்க மண்டலம் காரணமாகவே இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வின்ட்சர் (Windsor), ஹமில்டன் (Hamilton), பொரீ (Barrie) மற்றும் பெல்லிவில் (Belleville) வரையான பகுதிகளில் விசேட வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ரொறன்ரோ நகரில் சுமார் 5 சென்ரிமீற்றர் வரை பனிப்பொழிவு காணப்படுவதுடன், பார்வைத்திறன் குறையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிச்சனர் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள்: இப்பகுதிகளில் 5 முதல் 10 மில்லிமீற்றர் வரை பனி உறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன், மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஏற்கனவே பனி மூடிக்காணப்படும் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை முடிவிற்குள் 15 முதல் 20 சென்ரிமீற்றர் வரை மேலதிக பனிப்பொழிவு பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக ரொறன்ரோவிலிருந்து ஹமில்டன், கிச்சனர் மற்றும் குவெல்ப் (Guelph) நோக்கிச் செல்லும் பகுதிகளில் பனிப்பொழிவு படிப்படியாக உறைபனி மழையாக மாறக்கூடும்.
இதனால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்பதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை காலை முதல் இந்த சீரற்ற வானிலை ஆரம்பமாகி, மாலை வரை நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.