இலங்கையில் 1983 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட விசேட அறிக்கை தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற 'நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்' மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 2026 ஜனவரி 13ஆம் திகதியன்று 'இலங்கையில் மோதல்கள்சார் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள்' தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
1983 முதல் 2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் வன்முறைகள் குறித்து இந்த அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த அறிக்கை தொடர்பில் அரசோ அல்லது பொறுப்பான அமைச்சரோ இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை.
இந்த அறிக்கையில் 23 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும்
சித்திரவதைகள் குறித்து சாட்சியமளித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களும் அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. யுத்த சூழலில் உயிர்பிழைத்தவர்கள், முறைப்பாடு செய்ய முடியாத அளவுக்குக் கொடூரமான சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற இத்தகைய வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் பலர் இன்றும் சுதந்திரமாக உலாவுகின்றனர். ஒரு சிலர் உயர்பதவிகளிலும் உள்ளனர். இந்த அரசு சட்டத்தை மதித்துச் செயற்படுவதாக இருந்தால், ஐ.நா. அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
நீதிக்காகப் பாதிக்கப்பட்ட மக்கள் நீண்டகாலமாக காத்திருப்பது, நீதி பொறிமுறைக்கே முரணானது. காலம் கடந்து செல்லும் நீதியானது கேள்விக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்க முடியாதது. எனவே, இந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பில் அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும்.
அதேநேரம், தற்போதைய சூழலிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார். அச்சிறுவனின் உறவினர்கள் நீதி கோரி போராடி வரும் நிலையிலும், இதுவரை அந்தச் சம்பவத்திற்கு முறையான நீதி கிடைக்கவில்லை' என்றார்.