கனடாவில் வாழும் சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம் மக்கள், ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களின் பின்னர் இம்முறை ரமலான் மாதத்தை முழுமையாக குளிர்காலப் பகுதியில் ஆரம்பித்துள்ளனர்.
சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் ரமலான் மாதம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 நாட்கள் முன்னோக்கி நகர்வதால், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இம்முறை நோன்பு காலம் கடும் குளிர்காலத்துடன் ஒத்துப்போயுள்ளது.
குளிர்காலப் பகுதியில் பகல் பொழுது குறைவாகக் காணப்படுவதால், நோன்பு நோற்பது கடந்த ஆண்டுகளை விட இம்முறை இலகுவாகவும் இதமாகவும் (Pleasant) இருப்பதாக முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றனர். அதிகாலை முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீரின்றி நோன்பிருக்கும் நேரம் இம்முறை கணிசமாகக் குறைந்துள்ளது.
கனடாவின் முதலாவது பள்ளிவாசலான எட்மன்டனின் அல்-ரஷீத் பள்ளிவாசலில் (Al Rashid Mosque) நாளாந்தம் சுமார் 5,000 பேர் வரை ஒன்றுகூடி இப்தார் மற்றும் விசேட தொழுகைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 1938 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல், கனடாவின் பன்முகத்தன்மைக்கு ஒரு வரலாற்றுச் சான்றாக விளங்குகின்றது.
ரமலான் காலத்தில் பள்ளிவாசல்களில் மக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமிய வெறுப்புணர்வு (Islamophobia) தொடர்பான அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு பல பிரதான பள்ளிவாசல்களில் தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் நிதி உதவிகளும் பெறப்பட்டுள்ளன.
மார்ச் மாதத்தில் "ரமலானின் சுவை" எனும் தொனிப்பொருளில் விசேட உணவுத் திருவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது இஸ்லாமியர் அல்லாத ஏனைய மதத்தினருக்கும் ஹலால் உணவுகள் வழங்கப்பட்டு, இஸ்லாம் குறித்த தெளிவூட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
எட்மன்டன் உள்ளிட்ட பல நகரங்களில் ஒலிபெருக்கிகள் ஊடாக மக்ரிப் (சூரிய அஸ்தமனம்) வேளையில் பாங்கு ஓதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களுக்கு தமது தாயக நினைவுகளை மீட்டுவதாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரமலான் மாத இறுதியில் கொண்டாடப்படும் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) திருநாளை முன்னிட்டு, எட்மன்டன் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க High Level பாலம் மார்ச் 20ஆம் திகதி விசேட மின் அலங்காரங்களால் ஒளிரூட்டப்படவுள்ளது.