பிரிட்டிஷ் கொலம்பியாவின் பேர்ணபி (Burnaby) பகுதியில் வசிக்கும் 80 வயது மதிக்கத்தக்க தம்பதியினரை இலக்கு வைத்து, பொலிஸார் என அடையாளப்படுத்திக் கொண்டு சுமார் 3 இலட்சம் டொலர்களை மோசடியாளர்கள் கொள்ளையடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக புதன்கிழமை உத்தியோகபூர்வ எச்சரிக்கை விடுத்த பேர்ணபி ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸார், இச்சம்பவம் எவ்வாறு அரங்கேறியது என்பது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
ஆர்.சி.எம்.பி பொலிஸ் அதிகாரி என ஒரு நபர் தம்பதியினரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர்களின் வங்கி கணக்குகள் ஹேக் (Hack) செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே பணத்தைப் பாதுகாப்பதற்காக அதனை வேறு கணக்குகளுக்கு மாற்றுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த பல வாரங்களாகப் பல கட்டங்களாகப் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதன் போது பொலிஸாரைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள வேண்டாம் எனத் தம்பதியினர் மிரட்டப்பட்டுள்ளதோடு, பணத்தை மாற்றுவதற்காக 'கிப்ட் கார்டுகளை' (Gift cards) வாங்குமாறும் பணிக்கப்பட்டுள்ளனர்.
வங்கியினால் வழங்கப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 28ஆம் திகதியே குறித்த தம்பதியினர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பேர்ணபி ஆர்.சி.எம்.பி பேச்சாளர் கோப்ரல் மைக் கலாஞ்ச் (Cpl. Mike Kalanj), "மக்களை, குறிப்பாக முதியவர்களை இவ்வாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுவது மிகவும் கேவலமான செயலாகும்," எனக் கண்டனம் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கான முக்கிய குறிப்புகள்:
பொலிஸார் அல்லது வங்கி அதிகாரிகள் எவரும் உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தை மாற்றுமாறு ஒருபோதும் கோரமாட்டார்கள்.
யாராவது பொலிஸார் எனக் கூறினால், அவர்களின் பெயர் மற்றும் அடையாள இலக்கத்தைப் (Badge number) பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படும் பட்சத்தில், உடனடியாக உங்கள் வங்கிக் கிளையை நேரடியாக அணுகி முறையிடவும்.