கனடிய ஆயுதப்படைகளுக்குத் தேவையான ஆயுதத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதில் வெளிநாட்டு விநியோகஸ்தர்களிலான தங்கியிருப்பதைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான நாட்டின் முதலாவது 'பாதுகாப்புத் துறை மூலோபாயத்தை' (Defence Industrial Strategy) பிரதமர் மார்க் கார்னி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை கியூபெக் மாகாணத்தின் மொன்றியாலிலுள்ள 'CAE' நிறுவனத்திற்கு விஜயம் செய்த பிரதமர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
கனடிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்குக் கொள்வனவு நடவடிக்கைகளின் போது முன்னுரிமை வழங்கப்படுமென பிரதமர் உறுதியளித்தார். இது 1950களுக்குப் பின்னர் இத்துறையில் காணப்படும் பாரிய வளர்ச்சியெனக் கருதப்படுகிறது.
இந்த புதிய மூலோபாயத்தின் மூலம் சுமார் 125,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய பாதுகாப்புத் துறை ஊழியர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு அதிகமாகும்.
கொள்வனவு நடைமுறைகளை விரைவுபடுத்தவும், சிவப்பு நாடா முறையினை (Red tape) ஒழித்து உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்தவும் 'பாதுகாப்பு முதலீட்டு முகவரகம்' (Defence Investment Agency - DIA) எனும் புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
CAE நிறுவனத்தின் தலைவர் மெතිவ் ப்ரோம்பெர்க் (Matthew Bromberg) அரசாங்கத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ளதுடன், இது கியூபெக் மாகாணத்திற்கும் கனடாவிற்கும் சரியானதொரு நகர்வு எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கனடிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை சம்மேளனம் (CADSI) இத்திட்டம் குறித்து சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
அச்சம்மேளனத்தின் தலைவர் கிறிஸ்டின் சியான்பரானி (Christyn Cianfarani) பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டினார்:
தற்போதைய கொள்வனவு நடைமுறைகளில் பாரிய மாற்றங்கள் செய்யப்படாவிட்டால், இந்த மூலோபாயம் தோல்வியடையக்கூடும். இதுவே இத்திட்டத்தின் "பலவீனமான புள்ளி" (Achilles heel) என அவர் வர்ணித்துள்ளார்.
தற்போதைய முறையை விட மிக வேகமான முறையில் ஒப்பந்தங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
கியூபெக் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (MEQ), இந்தத் திட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களையும் உள்வாங்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகளாகக் கனடாவில் இயங்கும் நிறுவனங்களின் நிலைப்பாடு குறித்தும் மேலதிக தெளிவுபடுத்தல்களை அவர்கள் கோரியுள்ளனர்.
80 வருட கால வரலாற்றைக் கொண்ட CAE நிறுவனம், கனடாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முழுமையான கொள்ளளவை தாம் கொண்டுள்ளதாகத் தன்னம்பிக்கை வெளியிட்டுள்ளது.
