கன்சர்வேட்டிவ் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கம் வகிக்கும் கட்சியை விட்டு விலகி, ஆளும் லிபரல் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளமை கனடிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எட்மன்டன் ரிவர்பெண்ட் (Edmonton Riverbend) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெட் ஜெனரோக்ஸ் (Matt Jeneroux), எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து விலகி பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சியில் இணைந்து கொள்வதாக இன்று (18) அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து லிபரல் கட்சிக்கு தாவிய மூன்றாவது உறுப்பினர் மெட் ஜெனரோக்ஸ் ஆவார். இதற்கு முன்னதாக கடந்த நவம்பரில் கிறிஸ் டி என்ட்ரெமண்ட் (Chris d’Entremont) மற்றும் டிசம்பரில் மைக்கல் மா (Michael Ma) ஆகியோர் இதேபோன்று கட்சி மாறியிருந்தனர்.
அல்பெர்ட்டா மாகாணத்தின் 'நீலக்கோட்டை' என வர்ணிக்கப்படும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பலம் வாய்ந்த பகுதியில் இருந்து மெட் ஜெனரோக்ஸ் லிபரல் கட்சிக்கு மாறியுள்ளமை, ஆளும் கட்சிக்கு அந்த மாகாணத்தில் மேலதிக பலத்தை வழங்கியுள்ளது.
மெட் ஜெனரோக்ஸின் இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, 343 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம் பின்வருமாறு மாற்றமடைந்துள்ளது:
லிபரல் கட்சி: 169 ஆசனங்கள்
கன்சர்வேட்டிவ் கட்சி: 141 ஆசனங்கள்
பிளொக் கியூபெக்வா (Bloc Québécois): 22 ஆசனங்கள்
புதிய ஜனநாயகக் கட்சி (NDP): 07 ஆசனங்கள்
பசுமைக் கட்சி (Greens): 01 ஆசனம்
வெற்றிடங்கள்: 03 ஆசனங்கள்
லிபரல் கட்சி தற்போது 169 ஆசனங்களைக் கொண்டுள்ள போதிலும், அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான 172 என்ற இலக்கை அடைய இன்னும் 3 ஆசனங்கள் தேவையாக உள்ளன. இதனால் லிபரல் கட்சி தொடர்ந்தும் சிறுபான்மை அரசாங்கமாகவே செயற்பட வேண்டியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தத் தீர்மானத்தை கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) வன்மையாகக் கண்டித்துள்ளார்.
"மெட் ஜெனரோக்ஸ் தனது தொகுதி மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். மலிவான உணவு, கட்டுப்படியாகும் வீடுகள் மற்றும் பாதுகாப்பான வீதிகளுக்காக வாக்களித்த எட்மன்டன் ரிவர்பெண்ட் மக்களை அவர் ஏமாற்றிவிட்டார்," என பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார். அத்துடன், பிரதமர் மார்க் கார்னி திரைமறைவு ஒப்பந்தங்கள் மூலம் பெரும்பான்மையைப் பெற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.