கனடாவின் எக்ஸ்பிரஸ் என்ட்ரி குடியேற்ற விதிகளில் மாற்றம்; இராணுவப் பிரிவினருக்கும் முன்னுரிமை!

கனடாவின் எக்ஸ்பிரஸ் என்ட்ரி குடியேற்ற விதிகளில் மாற்றம்; இராணுவப் பிரிவினருக்கும் முன்னுரிமை!

கனடாவின் குடியேற்றக் கொள்கையில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ள அந்நாட்டு அரசாங்கம், புதிய முன்னுரிமைப் பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களைக் கோருவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஆராய்ச்சி, சுகாதாரத் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கும், இராணுவப் பிரிவில் இணைந்து கொள்ளும் ஆட்சேர்ப்பாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக பெப்ரவரி 18ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இலக்குகளுக்கு அமைய இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கனடாவிற்கு வருகை தரும் நிரந்தர வதிவிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளை, திறமையான பணியாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை ஈர்ப்பதுடன், அமெரிக்காவிலான தங்கியிருப்பைக் குறைத்து நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

நாட்டில் நிலவும் வீடமைப்பு நெருக்கடி மற்றும் சமூக சேவைகளுக்கான அழுத்தங்களைக் குறைக்கும் பொருட்டு, குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்த கனடா கடந்த சில வருடங்களாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நிலையில், அத்தியாவசிய துறைகளுக்குத் தேவையான பணியாளர்களைக் கண்டறியும் வகையில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட குடியேற்றத்துறை அமைச்சர் லீனா மெட்லெஜ் தியாப் (Lena Metlege Diab), 2026ஆம் ஆண்டிற்கான எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறைமையின் மாற்றங்கள், கனடா எதிர்கொள்ளும் பாரிய தொழிலாளர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உதவும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, நாட்டுக்கு வருகை தரும் முதல் நாளிலேயே பங்களிப்பு வழங்கக்கூடிய திறமையாளர்களை ஈர்க்க இது வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய முன்னுரிமைப் பிரிவுகள்: புதிய விதிகளின் கீழ் பின்வரும் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது:

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமையாளர்கள்.

விமானிகள் (Pilots) மற்றும் விமானத் தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைப் பணியாளர்கள்.

கனடாவில் அனுபவம் பெற்ற வெளிநாட்டு வைத்தியர்கள்.

கனடா ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ளும் தகுதியுள்ள வெளிநாட்டு இராணுவ விண்ணப்பதாரிகள் (குறிப்பாக இராணுவ வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் விமானிகள்).

"மாறிவரும் பொருளாதாரத்திற்குத் தயாராக உள்ள ஒரு உழைக்கும் சமூகத்திலேயே கனடாவின் எதிர்காலம் தங்கியுள்ளது," என அமைச்சர் தியாப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமர் மார்க் கார்னி கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி புதிய பாதுகாப்பு மூலோபாயமொன்றை அறிவித்திருந்தார். இதன்படி, எதிர்வரும் தசாப்தத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அரசாங்க முதலீட்டை 85 வீதத்தினால் அதிகரிக்கவும், பாதுகாப்புத் துறை ஊடான வருமானத்தை 240 வீதத்திற்கும் மேலாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 125,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளைப் போலவே, கனடாவும் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதுகாப்புச் செலவினத்தை 2035ஆம் ஆண்டளவில் 5 வீதமாக அதிகரிக்க உறுதி பூண்டுள்ளது.

இதேவேளை, பிரெஞ்சு மொழிப் தேர்ச்சி உடையவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஏனைய தொழிற்றுறைத் திறமையாளர்களுக்காக ஏற்கனவே நடைமுறையிலுள்ள எக்ஸ்பிரஸ் என்ட்ரி பிரிவுகளும் புதிய மாற்றங்களுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி