பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் இளைய சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor), பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்திச் சேவை இன்று (19) செய்தி வெளியிட்டுள்ளது.
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) தொடர்புகள் மற்றும் அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, கிழக்கு இங்கிலாந்திலுள்ள சான்றிங்ஹாம் (Sandringham) அரச பண்ணை இல்லத்திற்கு (Wood Farm), அடையாளக் குறிகள் அற்ற ஆறு பொலிஸ் வாகனங்களில் வருகை தந்த சுமார் எட்டு சிவில் உடை தரித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனைகளை முன்னெடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அமெரிக்க அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட இரகசிய ஆவணங்களின் அடிப்படையில், இளவரசர் ஆண்ட்ரூ அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை ஜப்ரி எப்ஸ்டினுக்கு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேம்ஸ் வெளி (Thames Valley) பொலிஸார் இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தனர்.
மறைந்த எலிசபெத் மகாராணியின் இரண்டாவது புதல்வரான இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டினுடனான தனது நட்பு குறித்து கவலை வெளியிட்டிருந்த போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றார். எவ்வாறாயினும், அண்மையில் ஆவணங்கள் வெளியாகிய பின்னர் இது குறித்து அவர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இளவரசர் ஆண்ட்ரூவின் கைது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தேம்ஸ் வெளி பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"சட்டம் தனது கடமையைச் செய்யும்"
தனது இளைய சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் (King Charles III) பகிரங்கமாக தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். "சட்டம் தனது கடமையைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்" என அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
எப்ஸ்டின் (Epstein) ஆவணங்கள் தொடர்பான மீளாய்வுகளின் அடிப்படையில், அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் முறையற்ற நடத்தை ஆகிய சந்தேகத்தின் பேரில் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே மன்னரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்தச் சூழல் மிகவும் கவலைக்குரியது என வர்ணித்துள்ள மன்னர், பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அரச குடும்பம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார். இளவரசர் ஆண்ட்ரூவைச் சூழ்ந்துள்ள நீண்டகால சர்ச்சைகளில், இம்முறை மன்னர் நேரடியாகக் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகப் பார்க்கப்படுகிறது.
மன்னர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் மற்றும் அவர் மீதான அரச பதவியை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பான செய்திகளை நான் மிகுந்த கவலையுடன் அறிந்துகொண்டேன்."
மேலும், சட்டம் அதன் முறையான வழிமுறையைப் பின்பற்ற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை அரச குடும்பம் வழங்கும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூ தனது 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இன்றைய தினத்திலேயே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை பிரித்தானிய அரச குடும்ப வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.