துப்பாக்கிச்சூடு: முகாபேயின் புதல்வர் தென்னாபிரிக்காவில் தடுத்து வைப்பு!

துப்பாக்கிச்சூடு: முகாபேயின் புதல்வர் தென்னாபிரிக்காவில் தடுத்து வைப்பு!

தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, ஜிம்பாப்வேயின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி றொபேர்ட் முகாபேயின் (Robert Mugabe) இளைய புதல்வர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

28 வயதான பெல்லார்மைன் முகாபே (Bellarmine Mugabe) என்பவரே இவ்வாறு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். குறித்த இல்லத்தில் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றிய 23 வயதுடைய இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ள நிலையில், இது ஒரு 'கொலை முயற்சி' வழக்காக பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைட் பார்க் (Hyde Park) பகுதியில் முகாபே தங்கியிருந்த இல்லத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் (Bullet cartridges) மீட்கப்பட்டுள்ளன. எனினும், துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெல்லார்மைன் முகாபே, மறைந்த றொபேர்ட் முகாபே மற்றும் அவரது இரண்டாவது மனைவி கிரேஸ் முகாபே ஆகியோரின் இளைய புதல்வர் ஆவார். ஜிம்பாப்வேயை 37 வருடங்களாக ஆட்சி செய்த றொபேர்ட் முகாபே, 2017 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவர் 2019 ஆம் ஆண்டு காலமானமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேணல் திமாகட்சோ நெவ்ஹுஹுல்வி (Col Dimakatso Nevhuhulwi) கருத்துத் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற விதம் குறித்து விசாரணை நடத்துவதற்காக இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களை பொலிஸார் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. எனினும், சம்பவ இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் பெல்லார்மைன் முகாபே கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டுள்ளதுடன், உள்ளூர் ஊடகங்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர் ஒருமுறை சுடப்பட்டுள்ள நிலையில், தற்போது கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், துப்பாக்கி எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவர்கள் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை என பொலிஸ் தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி