இம்ரான் கானுக்கு மருத்துவ வசதி மற்றும் மனிதாபிமான நிவாரணம் கோரி இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை!

இம்ரான் கானுக்கு மருத்துவ வசதி மற்றும் மனிதாபிமான நிவாரணம் கோரி இலங்கை நாடாளுமன்றத்தில் பிரேரணை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தடுத்து வைப்பு மற்றும் அவரது உடல்நிலை குறித்து மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவினால் இந்த ஒத்திவைப்புப் பிரேரணை (Adjournment Motion) சபையில் முன்வைக்கப்பட்டது.

சிறைக்காவலில் உள்ள இம்ரான் கானின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்து எழுந்துள்ள கவலைகளை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

+1

இம்ரான் கானின் தற்போதைய நிலை குறித்த நம்பகமான தகவல்கள் மனிதாபிமான ரீதியிலான கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளதாக அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தூதரக மற்றும் நாடாளுமன்ற ரீதியிலான வழிமுறைகள் ஊடாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

பிரேரணையின் முக்கிய அம்சங்கள்:

இம்ரான் கானுக்கு போதுமான மற்றும் சுயாதீனமான மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய பாகிஸ்தான் அரசை கொழும்பு வலியுறுத்த வேண்டும்.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமைய, அவரை விடுவிப்பதற்கான மனிதாபிமான கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு, குறிப்பாக 1992ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்தமை மற்றும் இலங்கை உள்ளிட்ட கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடன் அவர் கொண்டுள்ள நல்லுறவு குறித்தும் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் கிரிக்கெட் சாதனைகள் அரசியல் எல்லைகளைக் கடந்து சர்வதேச ரீதியில் நல்லெண்ணத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அஜித் பி. பெரேரா, இலங்கை கிரிக்கெட் சமூகம் மற்றும் பொதுமக்களின் இந்த உணர்வுகளை பாகிஸ்தானுக்குத் தெரியப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

ஜனநாயக விழுமியங்கள், மனிதாபிமானக் கொள்கைகள் மற்றும் சர்வதேச நல்லெண்ணம் ஆகியவற்றில் இலங்கைக்கு உள்ள உறுதிப்பாட்டை இந்தப் பிரேரணை மீள உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பிரேரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி