இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்திருந்தால், அவர்கள் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள் என்றும், பிரபாகரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், 2009 மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதித் தருணங்கள் குறித்துப் பல முக்கிய இரகசியங்களை வெளிப்படுத்தினார்.
'விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு வழிவகுக்கும் வகையில், 2009 மே 17ஆம் திகதி காலை மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
'அச்சமயம் புலிகளின் தலைவர்கள் சுமார் 400 மீற்றர் பரப்பளவிற்குள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர். இன்னும் சில மணித்தியாலங்களில் தாம் கொல்லப்படுவோம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது' என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
ராஜபக்ஷக்கள் முன்வைத்த சரணடையும் கோரிக்கையை புலிகளின் தலைவர்கள் நிராகரித்ததாகத் தெரிவித்த அவர், 'புலிகள் இராணுவத்திடம் சரணடைய விரும்பவில்லை. மாறாக, அர்கள் ஒரு மூன்றாம் தரப்பினரிடமே (சர்வதேச அமைப்புகள்) சரணடைய விரும்பினர்.
'ஆனால், ராஜபக்ஷக்கள் அதனை எதிர்த்ததுடன், இராணுவத்திடமே சரணடைய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது' என்றார்.
இச்சந்திப்பின் போது, மே 17 மாலை அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கும் சவேந்திர சில்வாவுக்கும் இடையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் அடங்கிய காணொளி ஒன்றையும் பொன்சேகா வெளியிட்டார்.
'இந்தச் சம்பவங்கள் நடந்தபோது நான் சீனாவில் இருந்தேன். சர்வதேச அமைப்புகளுடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. இராணுவத்தினர் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை; அவர்களை அழிக்கவே திட்டமிட்டிருந்தனர்.
'ராஜபக்ஷக்களின் கோரிக்கையை புலிகள் ஏற்க மறுத்தமையால், மே 19 அன்று இராணுவத்தால் அவர்களை முற்றாக ஒழிக்க முடிந்தது' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அமரகீர்த்தி கொலைக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள். இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதென்பதை ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய வேண்டும் என கூறினார்.
2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் திட்டமிட்டு இடையூறு விளைவிக்க முயன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாரிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு பேரவைக் கூட்டங்களின் போது, தனது போர்க்கள வியூகங்களுக்கு முரணான திட்டங்களை அவர்கள் முன்வைத்ததாகவும், குறிப்பாக வெலிஓயா பகுதியில் விடுதலைப் புலிகளை நான்கு திசைகளிலிருந்தும் முற்றுகையிடும் தனது திட்டத்தை எதிர்த்து, வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடியாக முன்னேறுமாறு அவர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ வெற்றியைத் தாமதப்படுத்தி, தன்னை மனச்சோர்வடையச் செய்யும் ஒரு முயற்சியே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் இறுதி நாளான 2009 மே 17 அன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மேலும் விளக்கிய பொன்சேகா, விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதியான நிலையில், அதன் முக்கியத் தலைவர்களான பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோரின் உயிரைக் காப்பாற்ற ராஜபக்ஷக்கள் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, புலிகளின் தலைவர்கள் ஒரு மூன்றாவது தரப்பிடம் சரணடைவதற்குப் பின்னணி வழிகளை ஏற்படுத்த ராஜபக்ஷக்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இது புலிகளை முற்றுமுழுதாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற தனது நேரடி உத்தரவுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், "வெள்ளைக் கொடி" விவகாரம் என்பது தமக்கு எதிராகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு சதி என்றும், சரணடைந்தவர்களைச் சுடுமாறு தான் ஒருபோதும் உத்தரவிடவில்லை என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.