மெக்சிகோவிலுள்ள சொகுசு விடுதி ஒன்றிற்கு சுற்றுலா சென்ற பெருமளவான கனடியர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, சிலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மெக்சிகோவிலுள்ள 'ரொயல்டன் ஸ்ப்லாஷ் ரிவியரா' (Royalton Splash Riviera) விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உணவு நஞ்சானமையே இதற்குக் காரணம் என பாதிக்கப்பட்டவர்களும் வைத்தியர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
"ஒவ்வொருவராக நிலைகுலைந்தோம்"
ஹமில்டன் பகுதியிலிருந்து தனது குடும்பத்துடன் சென்றிருந்த கெல்லி பென்னட் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், விடுதியில் தங்கியிருந்த மூன்றாவது நாளில் தமது குடும்பத்தினர் "ஈக்கள் விழுவதைப் போல" அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
"ஒரே நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பேர் நோய்வாய்ப்பட்டோம். பல குடும்பங்கள் அறைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தன. தாழ்வாரங்களில் குழந்தைகளுடன் பெற்றோர் தவிப்பதையும், துப்பரவு செய்யப்பட்ட துவாய்களையும் காணக்கூடியதாக இருந்தது. ஏதோ ஒரு தொற்று அங்கு பரவுகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது" என அவர் மேலும் தெரிவித்தார்.
கனடா திரும்பிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், அவர்களுக்கு 'நோரோவைரஸ்' (Norovirus) தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மலச் மாதிரிகளில் உணவு மூலம் பரவும் ஒட்டுண்ணிகள் (Parasites) காணப்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இரகசிய ஒப்பந்தம் (NDA)
இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிடாமல் இருப்பதற்காக, தங்கியிருந்த ஒருவரிடம் விடுதி நிர்வாகம் இரகசிய ஒப்பந்தம் ஒன்றில் (Non-disclosure agreement) கையெழுத்து வாங்க முயற்சித்துள்ளதாக பென்னட் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, வான்கூவர் தீவைச் சேர்ந்த வொரன் கரியர் மற்றும் அவரது தோழி நிக்கோல் ஆகியோரும் இதேபோன்ற மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர். "அதுவொரு நரகம் போன்ற அனுபவம். நிக்கோல் கனடா திரும்பியதும் பல நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஈ-கோலை (E. coli) பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது" என வொரன் தெரிவித்தார்.
விடுதி நிர்வாகத்தின் மௌனம்
இந்த விவகாரம் தொடர்பாக CTV News செய்திச் சேவை விடுதி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட போதிலும், அவர்கள் எவ்வித பதிலும் வழங்கவில்லை. எவ்வாறாயினும், தற்போது விடுதியின் உணவகங்களுக்குச் செல்லும் போது ஊழியர்கள் கிருமிநாசினிகளை (Hand sanitizer) வழங்குவதோடு, முகக்கவசம் அணிந்து பணியாற்றுவதாகவும், இதன் மூலம் அங்கொரு பிரச்சினை இருப்பதை நிர்வாகம் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பென்னட் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல்
தற்போது கனடியர்கள் அதிகளவில் மெக்சிகோவிற்கு சுற்றுலா செல்வதால், உணவு மற்றும் நீர் விடயத்தில் அதிக அவதானத்துடன் இருக்குமாறு தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் எச்சரித்துள்ளார். "கொதிக்க வைக்கவும், தோலை உரிக்கவும், சமைக்கவும் அல்லது அதைத் தவிர்க்கவும்" (Boil it, peel it, cook it or forget it) என்ற ஆலோசனையை அவர் வழங்கியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான பயணங்களின் போது உரிய மருத்துவக் காப்பீடுகளை (Medical Insurance) வைத்திருப்பது அவசியமென சுற்றுலாத்துறை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
