புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நாமல் உரை!

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் (Cambridge) மற்றும் ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகங்களின் விசேட அழைப்பினை ஏற்று, இரண்டு விரிவுரை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று மாலை லண்டன் நோக்கிப் புறப்பட்டார்.

அவருடன் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், மிலிந்த ராஜபக்ச, தேனுக்க விதாநாகமகே மற்றும் யூ.வி. சுமித் ஆகியோரும் இப்பயணத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

கேம்பிரிட்ஜ் யூனியன் மற்றும் ஒக்ஸ்போர்ட் யூனியன் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குகளில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்ஷவுக்கு சில வாரங்களுக்கு முன்னரே உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இப்பயணத்திற்காக ஏற்கனவே விசா மற்றும் விமான டிக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இறுதி நேரத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விரிவுரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அழைக்கப்பட்ட அதிதிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க முடியாது எனத் தெரிவித்தே இப்பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், புலம்பெயர் அமைப்புகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இதுவரையில் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இதனால், கேம்பிரிட்ஜ் விரிவுரை இடம்பெறாவிட்டாலும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விரிவுரையில் கலந்துகொள்வதற்காக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் லண்டன் செல்வதாக சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பல அரசியல் தலைவர்கள் முன்னரும் இவ்வாறான கௌரவமான விரிவுரைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான மறைந்த லலித் அத்துலத்முதலி மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் முன்னதாக இவ்வாறான விரிவுரைகளை ஆற்றியுள்ளனர்.

அத்துடன், கடந்த 2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கும் இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கடும் போராட்டங்கள் காரணமாக லண்டனில் அந்த நிகழ்வு இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் விரிவுரையை ரத்து செய்துள்ள போதிலும், இலங்கை அரசியல் தலைவர்களுடன் நீண்டகாலமாகப் பேணி வரும் உறவின் அடிப்படையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாது விரிவுரையை நடத்தும் என எதிர்பார்ப்பதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் புகழ்பெற்ற அரசியல்வாதியான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அவர்கள் ஒக்ஸ்போர்ட் யூனியனின் முதலாவது ஆசியச் செயலாளராகப் பணியாற்றியதுடன், பின்னரான காலத்தில் லலித் அத்துலத்முதலி அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமையையும் அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.

இதேவேளை, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரின் பாதுகாப்புக் கருதி, பிரித்தானிய பாதுகாப்புப் பிரிவினர் ஏற்கனவே அவர்கள் தங்குவதற்காகத் தீர்மானிக்கப்பட்டிருந்த விடுதிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி