அறுபது ஆண்டுகளுக்கு மேல் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள் பற்றி அதிகம் பேசியது ஜே.வி.பிதான். அதற்காக பல்லாயிரம் பேரின் இரத்தத்தைச் சிந்த வைத்து உயிர்களைக் குடித்ததும் அதுதான். அதனையும் உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி இப்போது கோட்பாடுகளின் முரண்பாட்டில் சிக்கி குழப்பத்தில் இருப்பது அம்மணமாகத் தோற்றுகின்றது.
ஆரம்பத்தில் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சிகள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்று தோல்வி கண்ட ஜே.வி.பி. இப்போது அந்த வழிவகையில் இருந்து திரும்பிவிட்டது, அந்தச் சித்தாந்தக் கோட்பாட்டை விட்டு விலகிவிட்டதாக அது கூறுவதை நம்புவோம். ஆனால் இப்படி நூற்றி எண்பது பாகை சித்தாந்தக்
கோட்பாட்டில் ஜே.வி.பி. அடித்த - அடிக்கின்ற - குத்துகரணங்கள் பலப் பல.
சுமார் அரை நூற்றாண்டு காலம் கொடூர - குரூர - காட்டு மிராண்டித்தனமான - சட்ட கத் தொடரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீட்டுச் சட்டம் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்ட காலம் எல்லாம், மாற்றீடு வேண்டவே வேண்டாம், இந்தச் சட்டத்தை அடியோடு அகற்ற வேண்டும் என்று ஒற்றைக் குரலில் உறுதியாக சித்தாந்தம் பேசிய ஜே.வி.பி. இப்போது அதிகாரம் கைக்கு கிடைத்ததும் அதில் குத்துக்கரணம் அடித்து விட்டது.
மாகாண சபை அதிகாரப் பரவலாக்கல் முறைமை நடைமுறைக்கு வந்த போது அதனை ஒழிப்பதற்காக ஆயுதம் ஏந்தி, இரத்தக் களரிப் போராட்டம் நடத்திய ஜே.வி.பி. இப்போது ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த சமயத்தில் ஒருபுறம் அதிகார பரவலாக்கத்தை வரவேற்பதாகக் காட்டிக் கொண்டு மறுபுறம் அதற்கு ஆப்பு வைக்கும் முரண்பாடான சித்தாந்தத்தை க் கையாளுகின்றது.
தாம் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஒரு வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் என்று நாட்டு மக்களுக்கு வாக்குறுதி தந்த ஜே.வி.பி., இப்போது உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் மன நிலையைப் படித்துக் கொண்டதும், அந்தக் கொள்கையிலும் அந்தர் பல்டி அடித்து விட்டது. இனி எப்போதும் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முதுகுத் திராணி அதற்கு வரும் என்று தோன்றவில்லை.
தன்னுடைய அரசியல் ஆதாயங்களுக்காக காலங்காலமாக இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்தி, அதில் குளிர்காய்ந்து, அரசியல் செய்து வந்த ஜே.வி.பி. இப்போது இந்திய ராஜதந்திரத்தைக் கைப்பிடித்து அதில் தொங்கிக் கொண்டு நிற்கின்றது. இந்தியப் போக்கை வானளாவ புகழ்ந்து அதன் வழி தொடர்வதாக வெளியே காட்டுகின்றது.
இப்படி அடிப்படை கோட்பாடுகளிலேயே குத்துக்கரணங்களை முன்னெடுத்து, அதன் மூலம் தன் ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்காக நடிப்புலகின் உச்சத்தில் செயற்படும் ஜே.வி.பியின் அடிநாதமான பண்பியல்புகளைப் புரிந்து கொள்ளாமல், தமிழ் தேசியத்தை மறந்து, தமிழர்கள் அதன் பின்னால் போவது விளக்கில் வீழும் விட்டில் பூச்சிகளின் கதையை ஒத்ததாக இருப்பதுதான் மன வருத்தத்திற்குரியது.