அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, உலகளாவிய இறக்குமதி வரிகளை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கனடா மற்றும் மெக்ஸிகோவுடனான வர்த்தக உடன்படிக்கைக்கு (CUSMA) உட்பட்ட பொருட்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க உயர் நீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகத்தினால் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரிய 'சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்' (IEEPA) கீழ் விதிக்கப்பட்டிருந்த வரிகள் செல்லுபடியற்றது எனத் தீர்ப்பளித்தது.
புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை:
நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 122 ஆம் பிரிவைப் பயன்படுத்தி இந்தப் புதிய வரிகளை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்த பின்னரே இந்த 15 சதவீத வரி அதிகரிப்பை மேற்கொண்டதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
"எதிர்வரும் சில மாத காலப்பகுதிக்குள், ட்ரம்ப் நிர்வாகம் புதிய மற்றும் சட்டப்பூர்வமான வரிகளை நிர்ணயித்து வெளியிடும். இது அமெரிக்காவை மீண்டும் வல்லரசாக்கும் எமது வெற்றிகரமான பயணத்தைத் தொடர உதவும்."
அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 122 ஆம் பிரிவானது 15 சதவீதம் வரை தற்காலிக வரிகளை விதிக்க அனுமதிக்கின்றது.
எவ்வாறாயினும், இந்த வரிகள் 150 நாட்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதுடன், அதனை நீடிப்பதற்கு நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதி அவசியமாகும்.
கனடாவுக்கான தாக்கம் மற்றும் விலக்குகள்:
அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு கனடாவைப் பெரியளவில் பாதிக்காது எனத் தெரியவருகின்றது. வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களின்படி, கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ வர்த்தக உடன்படிக்கைக்கு (CUSMA) உட்பட்ட பொருட்களுக்கு இந்தப் புதிய வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏனைய சில துறைசார் வரிகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன. குறிப்பாக, அமெரிக்க வர்த்தக விஸ்தரிப்புச் சட்டத்தின் 232 ஆம் பிரிவின் கீழ் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம், செம்பு, சில வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் மரத்தாலான பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே வரிகளை விதித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற் கொண்டு விதிக்கப்பட்ட இந்த 232 ஆம் பிரிவு வரிகள் குறித்து வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.