நாமல் ராஜபக்ஷவின் உரைகளை இரத்து செய்த ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள்!

நாமல் ராஜபக்ஷவின் உரைகளை இரத்து செய்த ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள்!

தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த சிறப்பு உரை நிகழ்வுகளை ஒக்ஸ்போர்ட் யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) ஆகிய இரண்டும் ரத்து செய்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷ, இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதால், அவர் ஒரு சர்ச்சைக்குரிய நபராகப் பார்க்கப்படுகிறார்.

இன்று பெப்ரவரி 23, ஒக்ஸ்போர்ட் யூனியனில் அவர் உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் அவரது வருகையை ரத்து செய்திருந்தது.

பிரித்தானியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ் மாணவர் சங்கங்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் காரணங்களைக் குறிப்பிட்டிருந்தனர்.

பாதுகாப்பு வலயங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான திட்டமிட்ட குண்டுவீச்சு. போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை. தமிழ் நிலங்களின் இராணுவமயமாக்கல் மற்றும் கலாசார அடையாளங்கள் அழிக்கப்படுதல்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவரை அழைப்பது, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து மறுத்து வரும் ஒரு ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமையும்" என தமிழ் இளைஞர் அமைப்பு (TYOUK) சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஒக்ஸ்போர்ட் யூனியன் தலைவர் கேத்தரின் யாங் கூறுகையில், "மாணவர்களின் நேரடி மற்றும் வெளிப்படையான கேள்விகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதே எமது நோக்கம். ஆனால், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களால் பாதுகாப்பாகவும் நேரடியாகவும் கேள்விகளை எழுப்ப முடியாது என உணர்கின்றனர். சமமான நிலையில் விவாதம் நடத்த முடியாத சூழலில் இந்த நிகழ்வை நடத்துவது சரியாக இருக்காது," எனத் தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜ் யூனியன் தரப்பில் கூறுகையில், "தற்போதைய சூழலில் இந்த விடயம் குறித்து ஒரு சமநிலையான மற்றும் திறந்த விவாதத்தை முன்னெடுக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம். எனவே எமது நிலைக்குழு இந்த ரத்து முடிவை எடுத்துள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி