மெக்சிகோவின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பாரிய வன்முறைச் சம்பவங்கள் வெடித்துள்ள நிலையில், அங்கிருக்கும் கனேடியப் பிரஜைகள் தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பான இடங்களுக்குள் முடங்குமாறு (Shelter in place) பணிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, விமான நிலையங்கள் மூடப்பட்டு விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால், வெண்டி புலோ (Wendy Buelow) போன்ற பல பயணிகள் நாடு திரும்ப முடியாமல் நடுத்தெருவில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன், அரசாங்கப் படையினரின் விசேட நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவலையடுத்து, ஜலிஸ்கோ (Jalisco) மாநிலம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குரிய புவேர்ட்டோ வல்லார்ட்டா (Puerto Vallarta) ஆகிய பகுதிகளுக்கான பயணம் பாதுகாப்பற்றது என மெக்சிகோ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விமான நிலையத்தில் நிலவிய மரண பயம்
வெண்டி புலோ மற்றும் அவரது கணவர் டேவ் ஆகியோர் ஞாயிறு காலை வின்னிபெக் (Winnipeg) நகருக்குப் புறப்படவிருந்தனர். எனினும், இராணுவத்தினர் விமான நிலையத்தை முற்றுகையிட்டு மூடியதால், அவர்கள் இருவரும் விமான நிலையத்திற்குள்ளேயே ஒருவரையொருவர் பிரிந்து தவித்தனர்.
"துப்பாக்கிச் சூடு போன்ற பலத்த சத்தங்கள் கேட்டன. நாங்கள் எமது பயணப் பொதிகள் வரும் கன்வேயர் பெல்ட்டுக்கு (Conveyor belt) மேலால் குதித்து அதற்குப் பின்னால் பதுங்கிக்கொண்டோம்.
பின்னர் விமான நிலைய ஊழியர்கள் எங்களை ஒரு நடைபாதை வழியாக அழைத்துச் சென்றனர். அங்கு அனைவரும் மிகுந்த அச்சத்துடன் இருந்தனர், பலர் கதறி அழுதுகொண்டிருந்தனர். அங்கு நிலவிய சூழல் சொல்லொணாதது" என வெண்டி புலோ விபரித்துள்ளார்.
அவர் பதுங்கியிருந்த வேளையில், அவரது கணவர் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து விமான ஓடுபாதைக்குள் (Tarmac) அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் சுமார் அரை கிலோமீற்றர் தூரம் ஓடித் தப்ப வேண்டியிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, ஊழியர்கள் பஸ்களை வரவழைத்து பயணிகளை மீண்டும் கட்டிடத்திற்குள் கொண்டு வந்தனர்.
ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் தற்போது இத்தம்பதியினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ள போதிலும், தாம் எப்போது அங்கிருந்து வெளியேறலாம் அல்லது எங்கு செல்லலாம் என்பது தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கனேடிய அமைச்சின் எச்சரிக்கை
ஜலிஸ்கோ மாநிலம் முழுவதும் குற்றக் கும்பல்கள் வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தி வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக கனேடிய வெளிவிகார அமைச்சு (Global Affairs Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மெக்சிகோவில் சுமார் 19,000 கனேடியர்கள் உள்ளதாகவும், ஜலிஸ்கோ மாநிலத்தில் மட்டும் சுமார் 5,000 பேர் தங்கியுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வன்முறை காரணமாக வெஸ்ட்ஜெட் (WestJet), எயார் கனடா (Air Canada), பிளேயர் எயார்லைன்ஸ் (Flair Airlines) உள்ளிட்ட அனைத்து முக்கிய விமான நிறுவனங்களும் தமது சேவைகளை இரத்துச் செய்துள்ளன அல்லது வேறு திசைகளுக்குத் திருப்பிவிட்டுள்ளன.
எங்கும் கறுப்புப் புகை
புவேர்ட்டோ வல்லார்ட்டாவின் சுற்றுலாப் பகுதியில் தங்கியிருந்த மெலனி ஆஸ்மாக் (Melanie Osmack) என்பவர் கூறுகையில், "வானம் முழுவதும் கறுப்புப் புகை சூழ்ந்திருந்தது. எரிக்கப்பட்ட வாகனங்களிலிருந்து வெளிவந்த புகையின் வாசனை எங்கும் பரவியிருந்தது" எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தமது விடுதிகளுக்குத் திரும்பி உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
தற்போது ஜலிஸ்கோ மாநிலத்தில் டாக்ஸி மற்றும் ஏனைய வாகனப் போக்குவரத்துச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
"எல் மென்சோ" கொல்லப்பட்ட பின்னணி
ஜலிஸ்கோ மாநில ஆளுநர் பப்லோ லெமஸ் நவரோ (Pablo Lemus Navarro) கருத்துத் தெரிவிக்கையில், ஞாயிறு காலை தபால்பா (Tapalpa) பகுதியில் கூட்டாட்சிப் படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையே மாநிலம் தழுவிய இந்த மோதல்களுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேடுதல் வேட்டையின் போது 'ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' அமைப்பின் தலைவன் நெமேசியோ ரூபன் ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல் மென்சோ) கொல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) செய்தி வெளியிட்டுள்ளது.
இவனைக் கைது செய்யத் தகவல் வழங்குவோருக்கு அமெரிக்கா 15 மில்லியன் டொலர் சன்மானம் அறிவித்திருந்ததுடன், ட்ரம்ப் நிர்வாகம் இவ்வமைப்பை ஒரு 'சர்வதேச பயங்கரவாத அமைப்பு' என்றும் அண்மையில் பிரகடனப்படுத்தியிருந்தது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand), இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதுடன், மெக்சிகோ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அங்குள்ள கனேடியர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.