மார்-ஏ-லாகோ இல்லத்திற்குள் அத்துமீறிய ஆயுததாரி சுட்டுக்கொலை: வாஷிங்டனில் ட்ரம்ப் இருந்தவேளை சம்பவம்!

மார்-ஏ-லாகோ இல்லத்திற்குள் அத்துமீறிய ஆயுததாரி சுட்டுக்கொலை: வாஷிங்டனில் ட்ரம்ப் இருந்தவேளை சம்பவம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குச் சொந்தமான புளோரிடாவின் மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தின் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட ஆயுததாரி ஒருவர், அமெரிக்க இரகசியப் பொலிஸாரினால் (Secret Service) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

அதிபர் ட்ரம்ப் பொதுவாக வார இறுதி நாட்களில் மார்-ஏ-லாகோ இல்லத்தில் தங்கியிருப்பது வழக்கம். எனினும், இந்த அத்துமீறல் இடம்பெற்ற சமயத்தில் அவர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட நபர், வட கரோலினாவைச் சேர்ந்த 21 வயதுடைய ஒஸ்டின் டக்கர் மார்ட்டின் (Austin Tucker Martin) என எஃப்.பி.ஐ (FBI) அடையாளம் கண்டுள்ளது. இவர் அண்மையில் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சந்தேக நபர் கைவசம் பெற்றோல் கொள்கலன் ஒன்றையும் (Gas can), துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் வெளியிட்ட விபரங்கள்:

மார்-ஏ-லாகோ இல்லத்தின் வடக்கு நுழைவாயில் ஊடாக வாகனம் ஒன்று வெளியேறிய சமயத்தில், அதனைப் பயன்படுத்தி சந்தேக நபர் தனது வாகனத்துடன் உள்ளே நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

"தனது கையில் இருந்த பொருட்களைக் கீழே போடுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்போது பெற்றோல் கொள்கலனைக் கீழே போட்ட அவர், தனது துப்பாக்கியை எடுத்து அதிகாரிகளை நோக்கி குறிவைத்தார்.

இதனையடுத்து, அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என பாம் பீச் கவுண்டி ஷெரிப் ரிக் பிராட்ஷா (Ric Bradshaw) ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

சந்தேக நபர் குறித்த முரண்பட்ட தகவல்கள்:

கொல்லப்பட்ட இளைஞன் மிகவும் அமைதியானவர் என்றும், துப்பாக்கிகள் மீது அவருக்கு விருப்பம் இருந்ததில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் ஒரு கோல்ஃப் மைதானத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், தனது வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு வழங்கி வந்ததாகவும் அவரது உறவினரான பிரேடன் ஃபீல்ட்ஸ் (19) தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களது குடும்பம் அதிபர் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்கள் என்றும், இந்தச் சம்பவம் தமக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியான வாதப்பிரதிவாதங்கள்:

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt), பாதுகாப்புத் துறையினரின் துரித நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவில் தற்போது நிலவும் அரசாங்க முடக்கம் (Government Shutdown) காரணமாகப் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஊதியம் வழங்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கு ஜனநாயகக் கட்சியினரே காரணம் எனச் சாடியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் மீதான முன்னைய கொலை முயற்சிகளைத் தொடர்ந்து, இந்தச் சம்பவமும் அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் எஃப்.பி.ஐ மற்றும் இரகசியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி