யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு!

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு!

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வடக்கின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) உத்தரவிட்டுள்ளது. முறையான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை பெறப்படாமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள இந்த பாரிய திட்டத்திற்கான அடிக்கல் கடந்த ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நட்டு வைக்கப்பட்டது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவவசம், தேவையான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, உரிய அனுமதி கிடைக்கும் வரை கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அபிவிருத்திப் பணிகளுக்கான சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மண்டைதீவு தீவுப் பகுதியானது உப்பு சதுப்பு நிலங்கள், சேற்று நிலங்கள், கண்டல் காடுகள், கடல் புற்கள் மற்றும் கடலோர ஈரநிலங்களைக் கொண்ட ஒரு சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக சுற்றாடல் ஆர்வலர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தேச மைதான அமைவிடம் மண்டைதீவு கண்டல் தாவர பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகாமையிலும், பிராந்திய திட்டமிடல் கட்டமைப்பின் கீழ் மிகவும் உணர்திறன் மிக்க பகுதியாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் முன்னெடுக்கப்படும் பாரிய அளவிலான கட்டுமானங்கள், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி மேற்கொள்ளப்பட்டால், அது கடலோர சூழலியல் அமைப்பைப் பாதிப்பதோடு பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என சுற்றாடல் அமைப்புகள் ஏற்கனவே கவலை வெளியிட்டிருந்தன.

நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டு அரங்கம், விடுதிகள், வர்த்தக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட சர்வதேச தரத்திலான வசதிகளைக் கொண்ட ஒரு 'விளையாட்டு நகரமாக' (Sports City) மண்டைதீவை மாற்றும் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மைதானம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த நிர்மாணப் பணியின் முதற்கட்டமாக, உள்நாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில் ஆடுகளம் மற்றும் பார்வையாளர் அரங்கு என்பன அமைக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி