இந்தியாவின் அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமைப் பூசகர் கைலாஷானந்த் கிரி ஜி மஹாராஜ் (Kailashanand Giri ji Maharaj) தலைமையிலான விசேட தூதுக்குழுவினர் இன்று (பெப்ரவரி 23) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உள்ளடங்கிய 14 பேரைக் கொண்ட இந்தத் தூதுக்குழுவினர், புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-192 ரக விமானம் மூலம் வருகை தந்தனர். இவர்களை விமான நிலையத்தில் வைத்து சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இலங்கைக்கான இந்த விசேட விஜயத்தின் போது, நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிவ ஆலயங்களுக்கு இக்குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர். அதன்படி, மன்னார் திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், திருகோணமலை கோணேஸ்வரம், நுவரெலியா சீதா அம்மன் ஆலயம் மற்றும் பொலன்னறுவையிலுள்ள பண்டைய சிவ ஆலய சிதைவுகள் ஆகியவற்றைப் பார்வையிடவும் வழிபாடுகளில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், இத்தூதுக்குழுவினர் தமது விஜயத்தின் ஒரு அங்கமாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
