மெக்சிகோ 'எல் மென்சோ' சுட்டுக்கொலை: பதில் தாக்குதலில் 25 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

மெக்சிகோ 'எல் மென்சோ' சுட்டுக்கொலை: பதில் தாக்குதலில் 25 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

மெக்சிகோவின் மிக மோசமான போதைப்பொருள் கடத்தல் கும்பலான 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்' (CJNG) அமைப்பின் தலைவர் 'எல் மென்சோ' என அழைக்கப்படும் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (Nemesio Oseguera Cervantes) பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்துள்ள வன்முறைச் சம்பவங்களில் மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலர் திங்கட்கிழமை (24) அறிவித்தார்.

சுற்றிவளைப்பும் மோதலும்:

ஜாலிஸ்கோ மாநிலத்திலுள்ள தபால்பா (Tapalpa) பகுதியில் தலைமறைவாக இருந்த 'எல் மென்சோவை' இலக்கு வைத்து ஞாயிற்றுக்கிழமை காலை இராணுவத்தினரும் தேசிய பாதுகாப்புப் படையினரும் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது இரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கடும் துப்பாக்கிச் சமரில் 'எல் மென்சோ' மற்றும் அவரது இரு மெய்க்காப்பாளர்கள் படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். எனினும், அவர்களை மெக்சிகோ நகருக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர்கள் உயிரிழந்ததாக பாதுகாப்புத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

பதில் தாக்குதல்களால் ஸ்தம்பிதமடைந்த மெக்சிகோ:

தமது தலைவனின் மரணத்தையடுத்து சினமடைந்த கார்டெல் (Cartel) உறுப்பினர்கள், மெக்சிகோவின் 20 இற்கும் மேற்பட்ட மாநிலங்களில் 250 இற்கும் அதிகமான இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி, வாகனங்களுக்குத் தீயிட்டு வன்முறைகளில் ஈடுபட்டனர்.

இந்த மோதல்களில் ஒட்டுமொத்தமாக பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆயுதக் குழுவினர் உட்பட குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு:

வன்முறை காரணமாக மெக்சிகோவின் பல பகுதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குவாடலஜாரா (Guadalajara) உயிரியல் பூங்காவிற்குச் சென்ற சுமார் 1,000 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் அங்கேயே பேருந்துகளில் தங்க வைக்கப்பட்டனர்.

அத்துடன், புவேர்ட்டோ வல்லார்டா (Puerto Vallarta) போன்ற சுற்றுலாத் தலங்களில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஒத்துழைப்பும் இராஜதந்திர நகர்வுகளும்:

இந்த விசேட நடவடிக்கைக்கு அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் ஒத்துழைப்பு வழங்கியதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்குள் பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்தும் 'எல் மென்சோவை' கைது செய்ய உதவுபவர்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில், மெக்சிகோ அரசாங்கம் முன்னெடுத்த இந்த நடவடிக்கை ஒரு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், கார்டெல் தலைவனின் மறைவைத் தொடர்ந்து அந்த அமைப்பிற்குள் அதிகாரப் போட்டி ஏற்படுமெனவும், இதனால் வரும் நாட்களில் வன்முறைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.