மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்களின் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 26,305 கனடியர்கள் அங்கு உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கென விசேட இராணுவ அல்லது தூதரக விமானங்கள் எதனையும் அனுப்பும் திட்டம் தற்போது இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் சுமார் 8,000 கனடியர்கள் புதிதாகத் தம்மைப் பதிவு செய்துள்ளனர். பலர் தன்னார்வ அடிப்படையில் பதிவு செய்யாததால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கனடாவின் அவசரகால கண்காணிப்பு மற்றும் மறுமொழி மையத்திற்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 440 இற்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைத்துள்ளன. இதில் இருவர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ வெளிவிவகார அமைச்சருடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு நிலைமை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அனிதா ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
புவேர்ட்டோ வல்லார்டா (Puerto Vallarta) விமான நிலையத்தின் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏயார் கனடா மற்றும் வெஸ்ட் ஜெட் போன்ற நிறுவனங்கள் தமது விமானங்களை இரத்து செய்துள்ள நிலையில், சில விமான நிறுவனங்கள் பெப்ரவரி 25 வரை பயணிகளுக்கு சலுகை மாற்றங்களை வழங்க முன்வந்துள்ளன.
மெக்சிகோவின் ஜாலிஸ்கோ (Jalisco) மற்றும் நயாரிட் (Nayarit) ஆகிய பகுதிகளில் தங்கியுள்ள கனடியர்கள், 'பாதுகாப்பான இடத்திலேயே தங்கியிருக்குமாறு' (Shelter-in-place) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அத்தியாவசியத் தேவையின்றி வீதிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் பின்பற்றுமாறும் கனடிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
குறைந்தபட்சம் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை வரை விமான சேவைகள் வழமைக்குத் திரும்பும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக, புவேர்ட்டோ வல்லார்டா (Puerto Vallarta) நகரினை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவிருந்த 6 விமான சேவைகளை ஏயார் கனடா (Air Canada) நிறுவனம் இரத்து செய்துள்ளது.
டொரண்டோ, மொன்றியால் மற்றும் வென்கூவர் ஆகிய மூன்று பிரதான கனடிய நகரங்களையும் புவேர்ட்டோ வல்லார்டாவையும் இணைக்கும் வகையிலான இந்த விமான சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, கனடாவிலிருந்து புறப்படவிருந்த 3 விமானங்களும், அங்கிருந்து மீண்டும் கனடா திரும்பவிருந்த 3 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் காரணமாக இரு வழிகளிலும் தலா 500 இற்கும் குறைவான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏயார் கனடா மேலும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் மற்றும் பயணக் கட்டண மீளளிப்புத் தொடர்பான விபரங்களை விமான நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பலின் தலைவர் 'எல் மென்சோ' கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்துள்ள வன்முறைகளால் விமான சேவைகள் முடங்கியுள்ளன.
"பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட்டவுடன் எமது வாடிக்கையாளர்களை மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுப்போம்" என ஏயார் கனடா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவேர்ட்டோ வல்லார்டா நோக்கிப் பயணித்த 7 விமானங்கள் வேறு திசைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதுடன், Guadalajara மற்றும் Manzanillo உள்ளிட்ட நகரங்களுக்கான 24 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒட்டாவா மற்றும் டொரண்டோவிலிருந்து இயக்கப்படவிருந்த இரண்டு சுற்றுப்பயண விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
Guadalajara மற்றும் புவேர்ட்டோ வல்லார்டா தவிர்ந்த மெக்சிகோவின் ஏனைய விமான நிலையங்கள் வழமை போல் இயங்குவதாக அறிவித்துள்ளது.
வன்முறைகள் குறித்து கருத்து வெளியிட்ட 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்' கார்டெல் அமைப்பின் உறுப்பினர் ஒருவர், "எமது தலைவரின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போது அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த வன்முறைகள், விரைவில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உள்வீட்டு மோதல்களாக மாறக்கூடும்" என ரொய்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட டொரண்டோ பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பேராசிரியர் அலெஜான்ட்ரோ கார்சியா மாகோஸ் (Alejandro Garcia Magos), "இந்தக் கும்பலின் தலைமை தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது.
எல் மென்சோ மிகவும் கொடூரமானவர். அவரது மரணம் அந்த அமைப்பைச் சிதைத்து, பலவீனப்படுத்தும். மெக்சிகோ ஜனாதிபதி கிளவுடியா ஷைன்பாமிற்கு இது ஒரு பாரிய வெற்றியாகும்" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலமாக மெக்சிகோவிற்கு வருகை தரும் டேனியல் ட்ரோலெட் எனும் கனடியர் கருத்துத் தெரிவிக்கையில், "வழமையாக அமைதியாக இருக்கும் இந்தச் சுற்றுலா வலயத்தில் இவ்வாறானதொரு பயங்கரமான சூழலை நான் கண்டதே இல்லை" எனத் தெரிவித்தார்.
தற்போது வன்முறை பாதித்த மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.