Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர்: கனடியர்களின் பயணங்களில் பாரிய வீழ்ச்சி!

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர்: கனடியர்களின் பயணங்களில் பாரிய வீழ்ச்சி!

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் நிலவி வரும் வர்த்தகப் போர் மற்றும் இராஜதந்திர முறுகல்கள் காரணமாக, அமெரிக்கா நோக்கிய கனடியர்களின் பயணங்கள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்து புள்ளிவிபரப் பணியகம் (BTS) தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வர்த்தக வரி விதிப்புகள் மற்றும் கனடாவின் சில பகுதிகளை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்வது தொடர்பான அச்சுறுத்தல்கள் காரணமாக, கனடியர்கள் அமெரிக்கப் பயணங்களைப் பகிஷ்கரித்து வருவதே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.

2025ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குள் நுழைந்த கனடியர்களின் தனிப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 18.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 18 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது.

எல்லைகளைக் கடக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கை 15.4 சதவீதத்தினாலும், பேருந்துப் போக்குவரத்து 14.6 சதவீதத்தினாலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத் தரவுகளின்படி, அமெரிக்காவுக்கான விமானப் பயணங்கள் 11 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளன. அதேவேளை, கனடியர்கள் அமெரிக்காவைத் தவிர்த்து ஏனைய நாடுகளுக்கான (Overseas) தமது விமானப் பயணங்களை 13.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்லை ஊடான பாரவூர்தி (Truck) போக்குவரத்து 5.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், போர்ட் ஹுரோன் (Port Huron) தவிர்ந்த ஏனைய அனைத்து எல்லைக் கடப்புகளிலும் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே காணப்படுகின்றன.

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியைத் தவிர்த்துப் பார்க்கும் போது, 2016 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணப் பரிமாற்றத்தில் பதிவான முதலாவது பாரிய வருடாந்த வீழ்ச்சி இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 'அமெரிக்காவிற்குப் போவதை தவிர்ப்போம்' (No thanks to US) எனும் நிலைப்பாட்டில் பெரும்பாலான கனடியர்கள் உறுதியாக இருப்பதை இந்தப் புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.