அதிகாரப் பிரயோகங்கள் மற்றும் மக்களின் இறைமை தொடர்பான விடயங்கள் இலங்கை அரசமைப்பில் மிகத் தெளிவாக வரையறுத்துக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நாட்டின் நிறைவேற்றதிகாரம் ஜனாதிபதியின் தலைமையில் பிரயோகிக்கப்படும். சட்டவாக்கல் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்திற்கு உரியது. நீதித்துறை அதிகாரம் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். இதுதான் அரசமைப்பு ஏற்பாடு. சட்ட ஒழுங்கு.
இந்த அதிகாரங்களைப் பிரயோகிக்கும் தரப்புகளைப் பொறுத்தவரை ஜனாதிபதியையும் சட்டவாக்கலை மேற்கொள்ளும் நாடாளுமன்றத்தையும் மக்கள் தங்கள் வாக்குரிமை என்ற இறைமை மூலம் தெரிவு செய்வார்கள் என்பதுதான் அரசமைப்பு ஏற்பாடு.
ஆகவே நிறைவேற்றதிகாரத்தை நெறிப்படுத்தும் முழுப் பொறுப்பும் ஜனாதிபதித் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் நிறைவேற்றதிகார ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதுதான் அரசமைப்பில் குறிக்கப்பட்டுள்ள விடயம். அதாவது நாட்டில் நிறைவேற்றதிகார விடயங்களைப் பிரயோகிப்பதற்கான முழுத் தற்றுணிவு அதிகாரங்களையும் கொண்டவர் ஜனாதிபதிதான்.
தற்போதைய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த இந்த முதல் 46 ஆண்டு காலமும் அதுதான் நடைமுறையில் இருந்து வந்தது. நிறைவேற்றதிகாரத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகளே அதனைப் பிரயோகித்து, கையாண்டு, நெறிப்படுத்தி வந்தார்கள். இப்போது, இது விடயத்தில் நிலைமையில் ஒரு மாற்றம் இருக்கின்றமையை ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
'இப்போதைய அரியணைக்கு - ஆட்சிப் பீடத்திற்கு - பின்னால் இருக்கும் உண்மையான சக்தி ஜே.வி.பியின் பொதுச் செயலாளரான நீங்கள் என்பதுதானே பொதுவான கருத்து' என்ற ஒரு கேள்வி அவர் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் - அவர் குறிப்பிட்ட - விடயங்கள்தான் கவனிக்கத்தக்கவை.
'முன்னர், அரசாங்கங்கள் ஒரு தனிநபரால் நடத்தப்பட்டன. ஒருவர் நிர்வாகத் தலைவராக ஆனபோது, அவர் தனியாகச் செயல்பட்டார். மற்றவர்கள் 'ஆம்' மனிதர்களாக மாறி தலைவரைப் பின்பற்றினர். நாங்கள் வேறுபட்டவர்கள். நாங்கள் ஏதேனும் புதிய முடிவுகளை எடுக்கும்போது, நாங்கள் தேசிய மக்கள் சக்தியாக ஆலோசித்து இந்த மாற்றங்களைச் செயல்படுத்துகிறோம். அதோடு, அமைச்சரவையும் அதன் சொந்த முடிவுகளை எடுக்கிறது. நாங்கள் கொள்கை முடிவுகளை எடுக்கும் போது, தேசிய மக்கள் சக்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி என்பதையும், கூட்டு முடிவுகளை எடுப்பதையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம். ஒரு நபர் அனைத்து முடிவுகளையும் எடுத்து பின்னர் அவற்றை செயல்படுத்த முற்படுவதில்லை.'
ஆக, அரமைப்பினால் வழங்கப்பட்ட நிறைவேற்றதிகாரத்தை ஜனாதிபதி தற்றுணிவில் பிரயோகிக்கவில்லை. தங்களின் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டுக் கட்டமைப்பு அதனை பிரயோகிக்கின்றது என்பதைச் சொல்லாமல் சொல்ல வருகிறார் ரில்வின் செல்வா. ஆழமாகக் கூர்ந்து நோக்கினால் இது நிறைவேற்றதிகாரப் பிரயோக விடயத்தில் முழு அளவில் அரசமைப்பு மீறலாகக் கொள்ளத்தக்கது.