2008ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பை நகரில் 166 பேரின் உயிரைப் பறித்த பாரிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர் தஹாவூர் ராணா ஹுசைனின் கனேடியக் குடியுரிமையைப் பறிக்க ஒட்டாவா தீர்மானித்துள்ளது.
65 வயதான தஹாவூர் ராணா மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, அவர் கனேடியக் குடியுரிமையைப் பெறுவதற்குத் தனது விண்ணப்பத்தில் தவறான தகவல்களை வழங்கியமையே (Misrepresentation) குடியுரிமை ரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.
2000 ஆம் ஆண்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்த போது, தான் ஒட்டாவா மற்றும் டொரண்டோ நகர்களில் வசித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், கனேடிய அரச பொலிஸாரின் (RCMP) விசாரணையில், அவர் அந்தக் காலப்பகுதியில் கனடாவில் வசிக்கவில்லை என்பதும், மாறாக அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரில் தனது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
"கனேடியக் குடியுரிமைச் சட்டங்களை மதிக்காமல், திட்டமிட்ட ஏமாற்று வேலைகளின் ஊடாக அவர் குடியுரிமையைப் பெற்றுள்ளார்" என கனேடிய குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சு (IRCC) தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை பெடரல் நீதிமன்றத்திற்கு (Federal Court) அரசாங்கம் பாரப்படுத்தியுள்ளதுடன், இறுதித் தீர்மானம் நீதிமன்றத்தினால் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஹாவூர் ராணா, மும்பை தாக்குதலுக்குத் திட்டமிட்ட 'லஷ்கர்-ஏ-தொய்பா' (Lashkar-e-Tayyiba) அமைப்புக்கு உதவியமைக்காக விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றார். அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட அவர், தற்போது அங்கு சிறையில் உள்ளார்.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உறவுகளைச் சீர்செய்யும் நோக்கில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகின்றது.
சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை விவகாரத்தால் கனடா - இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஒருவரின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா எடுக்கும் இந்த நடவடிக்கை இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்காலத்தில் இவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டால், அவர் கனடாவின் 'நிரந்தர வதிவிட உரிமையாளராக' (Permanent Resident) மாத்திரம் கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
