மெக்சிகோ இராணுவம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த அதிரடித் தாக்குதலில், அந்நாட்டின் மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ் (Nemesio Oseguera Cervantes) கொல்லப்பட்டுள்ளார்.
'எல் மென்சோ' என அழைக்கப்படும் இவரது மரணம், கடந்த பல ஆண்டுகளில் மெக்சிகோ முன்னெடுத்த மிக முக்கியமான இராணுவ வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.
வறுமையான பின்னணியில் பிறந்து, ஒரு காலத்தில் பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், பின்னர் போதைப்பொருள் உலகின் முக்கிய புள்ளியாக மாறினார்.
'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) என்ற அமைப்பை உருவாக்கிய இவர், அதனை 20 பில்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள ஒரு பாரிய நிழல் உலக சாம்ராஜ்யமாக வளர்த்தெடுத்தார்.
அமெரிக்காவிற்குள் உயிர்கொல்லி மருந்துகளைக் கடத்தியமைக்காக இவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு 15 மில்லியன் டொலர் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இவரது அமைப்பை ஒரு 'சர்வதேச பயங்கரவாத அமைப்பாக' அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
எல் மென்சோ கொல்லப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அவரது ஆதரவாளர்கள் மெக்சிகோ முழுவதும் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர்.
20 மாநிலங்களில் 250 இற்கும் மேற்பட்ட இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி, பேருந்துகள் மற்றும் கார்களைத் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
இந்தக் கொடூர வன்முறை மோதல்களில் மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக கனடியர்கள் அதிகம் செல்லும் புவேர்ட்டோ வல்லார்டா (Puerto Vallarta) போன்ற சுற்றுலா நகரங்களில் வன்முறை வெடித்துள்ளதால், அங்குள்ள வீதிகள் 'யுத்த வலயம்' போலக் காட்சியளிப்பதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 26,000 இற்கும் மேற்பட்ட கனடியர்கள் தற்போது மெக்சிகோவில் சிக்குண்டுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வன்முறை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டதுடன், பல விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
"எமது அழகான நகரம் சிதைக்கப்படுவதைப் பார்க்க வேதனையாக உள்ளது, இது ஒரு போர் மேகம் சூழ்ந்த பகுதியைப் போலத் தெரிகிறது" என அங்கு தங்கியுள்ள கனடிய சுற்றுலாப் பயணி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
"இந்தக் கும்பலின் தலைமை தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது (Beheaded)" என டொரண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் அலிஜான்ட்ரோ கார்சியா மாகோஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்காக அந்த அமைப்புக்குள் ஏற்படும் உள்வீட்டு மோதல்கள் வரும் நாட்களில் வன்முறையை மேலும் அதிகரிக்கக்கூடும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மெக்சிகோ ஜனாதிபதி கிளவுடியா ஷைன்பாம் நிலைமை வழமைக்குத் திரும்பும் என உறுதியளித்துள்ள போதிலும், அங்கு தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகள் 'பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு' (Shelter-in-place) அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.