போதைப்பொருள் ஒழிப்புக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நாடளாவிய ரீதியிலான வேலைத்திட்டத்தின் கீழ், வட மாகாண நிகழ்விற்காக மாத்திரம் அரசாங்கம் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக நிதியைச் செலவிட்டுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் சுவர்ணலிங்கம் வர்ணன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் யாழ். மாவட்டச் செயலகத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கடந்த 2026 ஜனவரி 16ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ‘நாடும் ஒன்றாக’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாண நிகழ்விற்காக, அரசாங்கம் ஒரு கோடியே பத்து இலட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து எழுபத்தைந்து (1,10,79,075.00) ரூபாயைச் செலவிட்டுள்ளது.
செலவு விபரங்களின் சுருக்கம்:
குறித்த நிகழ்வில் மண்டப வசதிகளுக்காகவே அதிகூடிய நிதி செலவிடப்பட்டுள்ளது.
இதர செலவு விபரங்கள் வருமாறு:
மண்டப வசதிகள்: 52 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் (5,237,000.00)
தேநீர் விருந்து: 31 இலட்சத்து 13 ஆயிரத்து 233 ரூபாய் (3,113,233.00)
மக்களுக்கான போக்குவரத்து: 23 இலட்சத்து 43 ஆயிரத்து 885 ரூபாய் (2,343,885.00)
ஏற்பாட்டுப் பணிகள்: 1 இலட்சத்து 18 ஆயிரத்து 940 ரூபாய் (118,940.00)
பதாகைகள் (Banners): 51 ஆயிரத்து 700 ரூபாய் (51,700.00)
குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள்: 36 ஆயிரத்து 890 ரூபாய் (36,890.00)
வரவேற்பு உபசாரங்கள்: 23 ஆயிரத்து 375 ரூபாய் (23,375.00)
ஏனைய செலவுகள்: 1 இலட்சத்து 54 ஆயிரத்து 52 ரூபாய் 50 சதம் (154,052.50)
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த காலத்தில் யுத்தம் காரணமாகத் தமது பிள்ளைகள் குறித்து அச்சமடைந்திருந்த வட பகுதிப் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் அச்சுறுத்தல் காரணமாகப் பிள்ளைகள் குறித்து அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எந்தவொரு பிரஜையும், நகரமும், கிராமமும், ஏழை-பணக்கார அல்லது சிங்கள-தமிழ் பேதமின்றிப் பரவி வரும் இந்தப் போதைப்பொருள் அரக்கனிடமிருந்து இளம் சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் வலுவாக முன்னெடுக்கப்படும் என்றும், இதனை எக்காரணம் கொண்டும் கைவிடப் போவதில்லை என்றும் அவர் அங்கு வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன், ஒரு சமூகமாகப் பாரிய பாதுகாப்பு அரணாக ஒன்றிணைந்து இதற்குப் பங்களிக்குமாறும் அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.