இனி 'கேரளா' அல்ல... 'கேரளம்'!

இனி 'கேரளா' அல்ல... 'கேரளம்'!

கேரளாவில் சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தின் பெயரை, 'கேரளம்' என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மலையாள மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இம்முடிவு எடுக்கப்பட்டதால் கேரள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த வகையில், 1956 நவ., 1ல், மலையாள மொழி பேசும் மக்களுக்காக, கேரளா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.

கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றக் கோரி கேரளா நீண்ட காலாமாக கோரிக்கை எழுப்பி வந்தது.

இந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு இது தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது.

இத்தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பவே மீண்டும் கடந்த 2024ஆம் ஆண்டு மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற வலியுறுத்தி 2ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் ஒன்றாக ‘கேரளா’ என்னும் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.