மெக்சிகோவில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது அங்கு நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், புவேர்ட்டோ வல்லார்ட்டா (Puerto Vallarta) மற்றும் குவாதலஜாரா (Guadalajara) ஆகிய பகுதிகளில் உள்ள கனடியர்கள், உறுதிப்படுத்தப்பட்ட விமானப் பயணச்சீட்டுகள் இருந்தால் மாத்திரம் விமான நிலையங்களுக்குச் செல்லுமாறு கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஒட்டாவாவில் இன்று காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த், "மெக்சிகோவில் நிலைமை தற்போது ஸ்திரமடைந்து வருகின்றது. இருப்பினும், நாட்டின் சில பகுதிகளில் இன்னும் தளம்பல் நிலை காணப்படுகின்றது.
எனவே, அங்கு தங்கியுள்ள கனடியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளை மிக நெருக்கமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்" எனத் தெரிவித்தார்.
ஜாலிஸ்கோ (Jalisco) மாநில அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, இன்று முதல் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வங்கிகள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் நகரங்களுக்கிடையிலான போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
எயார் கனடா, வெஸ்ட் ஜெட் மற்றும் போர்ட்டர் ஆகிய விமான நிறுவனங்கள் இன்று முதல் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளன. பிளயார் (Flair) நிறுவனம் நாளை முதல் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
வன்முறைகள் தணிந்துள்ள போதிலும், மெக்சிகோவின் சில மாநிலங்களுக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடிய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. பாதுகாப்பு நிலைமை எந்நேரத்திலும் மாறக்கூடும் என்பதால் 'மிகுந்த அவதானத்துடன்' (High degree of caution) இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவரான 'எல் மெஞ்சோ' (El Mencho) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது. ஆயுதம் ஏந்திய கும்பல்களால் வீதிகள் மறிக்கப்பட்டதோடு, வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் தங்குமிடங்களிலேயே முடங்கியிருந்தனர்.
தற்போது நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து வருவதாக ஒன்டாரியோவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். உணவகங்கள் மற்றும் சந்தைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும், நீண்ட வரிசைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், சுற்றுலா விடுதிகளுக்கு வெளியில் உள்ள உண்மையான நிலவரம் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தரவுகளின்படி, மெக்சிகோவில் உள்ள சுமார் 55,000 கனடியர்கள் வெளிவிவகார அமைச்சில் தமது விபரங்களைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் மேலும் சுட்டிக்காட்டினார்.