இறக்குமதி வரி மிரட்டல், ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் இன்று இரவு 'விசேட உரை’!

இறக்குமதி வரி மிரட்டல், ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ட்ரம்ப் இன்று இரவு 'விசேட உரை’!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸின் கூட்டு அமர்வில் தனது ‘நாட்டின் நிலை உரையை’ ஆற்றவுள்ளார்.

எதிர்வரும் இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், ஜனாதிபதியின் செல்வாக்கு சரிந்து வருவதாகக் கூறப்படும் பின்னணியில் இந்த உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நாங்கள் பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருப்பதால், இது ஒரு நீண்ட உரையாக இருக்கும்,” என ட்ரம்ப் திங்களன்று வெள்ளை மாளிகையில் தெரிவித்திருந்தார்.

இந்த உரையில் அவதானிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

1. இறக்குமதி வரி மற்றும் உயர்நீதிமன்ற மோதல்

அண்மையில் ட்ரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகளை (Tariffs) அமெரிக்க உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதற்குப் பதிலடியாக, நீதிபதிகளை "மூடர்கள்" என ட்ரம்ப் கடுமையாகச் சாடியிருந்தார்.

இன்று இரவு உரையாற்றும் போது, தமக்கு முன்னால் அமர்ந்திருக்கும் அதே நீதிபதிகளை அவர் நேரடியாக விமர்சிப்பாரா என்பது அரசியல் அரங்கில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2. பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு

அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறந்த பொருளாதாரத்தை தாம் கட்டியெழுப்பியுள்ளதாக ட்ரம்ப் கூறி வருகின்றார்.

எவ்வாறாயினும், பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, உணவுப் பொருட்கள், சுகாதாரம் மற்றும் வீட்டு வசதி தொடர்பான தீர்வுகளை மக்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

3. ஈரான் உடனான பதற்றம்

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைகள் மற்றும் அந்த பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவக் குவிப்பு காரணமாக போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இந்த உரையில் ஈரான் மீதான தாக்குதல் அல்லது இராஜதந்திர நகர்வுகள் குறித்து ட்ரம்ப் ஏதேனும் அறிவிப்பினை வெளியிடுவாரா என சர்வதேச சமூகம் உற்றுநோக்குகின்றது.

4. தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகள்

2020ஆம் ஆண்டு தேர்தலில் முறைகேடு நடந்ததாகத் தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் மீண்டும் முன்வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், எதிர்வரும் இடைக்காலத் தேர்தல்களில் தனது நிர்வாகத்தின் தலையீடு இருக்குமோ என்ற அச்சமும் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

5. கனடா மீதான தாக்கம்

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை இரத்து செய்வதாக ட்ரம்ப் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த உரையில் கனடா பற்றி அவர் ஏதேனும் குறிப்பிடுவாரா என கனேடிய அதிகாரிகள் கவலையுடன் உள்ளனர்.

அதேநேரம், அண்மையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கனேடிய ஹாக்கி அணிகளைத் தோற்கடித்து தங்கம் வென்ற அமெரிக்க அணிகளைப் பாராட்டி, கனடாவைக் கேலி செய்யும் விதமாகவும் அவர் பேச வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க நேரப்படி இரவு 9 மணிக்கு (ET) ஆரம்பமாகும்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி