ட்ரம்ப்பின் இறக்குமதி வரி மிரட்டலுக்குப் பணிந்ததா கனடா? ‘கல்ப்ஸ்ட்ரீம்’ விமானங்களுக்கு அவசர அனுமதி!

ட்ரம்ப்பின் இறக்குமதி வரி மிரட்டலுக்குப் பணிந்ததா கனடா? ‘கல்ப்ஸ்ட்ரீம்’ விமானங்களுக்கு அவசர அனுமதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடுமையான வர்த்தக அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ‘கல்ப்ஸ்ட்ரீம்’ (Gulfstream) ரக சொகுசு விமானங்களுக்கு கனடா உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

கனடாவின் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனமான ‘ட்ரான்ஸ்போர்ட் கனடா’ (Transport Canada), கல்ப்ஸ்ட்ரீம் நிறுவனத்தின் G700 மற்றும் G800 ஆகிய நவீன ரக ஜெட் விமானங்களுக்கு நேற்று திங்கட்கிழமை சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதன் மூலம் இந்த விமானங்கள் இனி கனடாவில் விற்பனை செய்யப்படவும், கனேடிய வான்பரப்பில் பறக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் மொன்றியலைத் தளமாகக் கொண்ட ‘பொம்பார்டியர்’ (Bombardier) நிறுவனத்திற்குப் போட்டியாக விளங்கும் கல்ப்ஸ்ட்ரீம் விமானங்களுக்கு கனடா அனுமதி வழங்கத் தாமதித்து வந்தது.

இதற்குப் பதிலடியாக, கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்த ஜனாதிபதி ட்ரம்ப், குறித்த விமானங்களுக்கு கனடா உடனடியாக அனுமதி வழங்காவிட்டால், கனடாவில் தயாரிக்கப்படும் அனைத்து விமானங்கள் மீதும் 50 சதவீத இறக்குமதி வரியை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்திருந்தார்.

அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் (FAA), இந்த விமானங்களின் எரிபொருள் அமைப்பில் பனி உருவாவதைத் தடுக்கும் தொழில்நுட்பம் (De-icing) குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தது. அத்துடன், இது தொடர்பில் ஆய்வு செய்ய கல்ப்ஸ்ட்ரீம் நிறுவனத்திற்கு இந்த ஆண்டின் இறுதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், கனடா அவசரமாக இதற்கு அனுமதி வழங்கியிருப்பது அரசியல் அழுத்தங்களின் விளைவா என்ற கேள்வியை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை என கனேடிய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon) தெரிவித்துள்ளார்.

"விமானங்களின் பாதுகாப்புத் தரநிலைகளில் நாம் சமரசம் செய்துகொள்வதில்லை. அதிகாரிகள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த அனுமதியை வழங்கியுள்ளனர்" என அவர் ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

கனடாவில் தயாரிக்கப்படும் விமானங்கள் 40 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்க உதிரிப்பாகங்களைக் கொண்டுள்ளன. ஒருவேளை ட்ரம்ப் தனது வரி மிரட்டலைச் செயற்படுத்தியிருந்தால், அது இரு நாடுகளின் விமானப் போக்குவரத்துத் துறையையும் பாரிய அளவில் பாதித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி