பி.சி, டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரியான மறைந்த ஜெசி வான் ரூட்சலர் (Jesse Van Rootselaar) என்பவரின் மூத்த சகோதரர், கனேடிய பொலிஸாரால் (RCMP) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 22 வயதான ஜேக்கப் ஜான் வான் ரூட்சலர் (Jacob Jan Van Rootselaar), தனது பிணை நிபந்தனைகளை மீறியதாலேயே நாடளாவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2024 அக்டோபர் 15 அன்று, போர்ட் மெக்முரே (Fort McMurray) பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து நபர் ஒருவரைக் கத்தியால் குத்திய குற்றச்சாட்டின் கீழ் ஜேக்கப் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கடும் நிபந்தனைகளுடன் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் 24 மணிநேர வீட்டுக்காவலில் (House Arrest) இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட அவர், கடந்த பெப்ரவரி 18 அன்று தனது வசிப்பிடத்தில் இருக்கவில்லை என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த ஜேக்கப், கடந்த பெப்ரவரி 19 அன்று அல்பேர்ட்டாவின் சில்வன் லேக் (Sylvan Lake) பகுதியில் வைத்து பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். கைதின் போது அவரிடமிருந்து தடைசெய்யப்பட்ட ஆயுதமான 'பித்தளை கைக்காப்பு' (Brass Knuckles) பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது அவர் மீது பின்வரும் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
நீதிமன்ற உத்தரவுகளை மீறியமை (5 குற்றச்சாட்டுகள்)
தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தமை (2 குற்றச்சாட்டுகள்)
ஜேக்கப் வான் ரூட்சலர் தற்போது அல்பேர்ட்டாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மார்ச் மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ஜேக்கப், கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி டம்பிளர் ரிட்ஜ் இடைநிலைப்பள்ளியில் ஐந்து மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரைச் சுட்டுக் கொன்ற ஜெசி வான் ரூட்சலரின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.