முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்
தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அவர் 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான சாட்சிகளின் அடிப்படையிலேயே சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், மேலதிக தகவல்கள் வரும் நாட்களில் வௌிப்படுத்தப்படும் என மேலும் குறிப்பிட்டார்.
சில மணிநேரங்களுக்குள் அனைத்து தகவல்களையும் வௌிப்படுத்துவது கடினம் எனத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, பொலிஸார் தமது கடமையைச் சரியாக நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார்.
கைதுக்கான காரணத்தை முறையாக வௌிப்படுத்தாமல் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக பொலிஸாருக்கு எதிராகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "அவரைக் கைது செய்யாதிருந்திருந்தால் தான் பொலிஸாருக்கு எதிராகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அத்துடன், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயிடம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளின் ஊடாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியிலுள்ள 'சூத்திரதாரி' (Mastermind) தொடர்பான தகவல்களை வௌிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் சஜீவ மெதவத்த நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்யும்போது அவரை 3 நாட்கள் தடுத்து வைக்கும் அதிகாரம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அதன்பின்னர், சாட்சிகளின் அடிப்படையில் தடுத்து வைக்கும் உத்தரவைப் (Detention Order) பெற்றுக்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் தௌிவுபடுத்தப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாலிய சேனாரத்ன மேலும் கூறினார்.
சுரேஷ் சாலே சி.ஐ.டியினால் கைது
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்டார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான மிலேச்சத்தனமான கடும்போக்குவாதிகள் குழுவினால் நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட 10 தற்கொலைத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அனைத்து விசாரணைகளிலும் வௌிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தாக்குதலை நடத்திய குழுக்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தற்போது வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சக்தியொன்று இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வந்தனர். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.
இதற்கிடையில், பிரித்தானியாவின் 'செனல் 4' (Channel 4) தொலைக்காட்சி ஒளிபரப்பிய 'Sri Lanka's Easter Bombings; Dispatches' என்ற ஆவணப்படத்தின் ஊடாக, முன்னாள் இராணுவப் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் பங்கேற்ற சந்திப்பொன்றில், ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
பிள்ளையானின் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றி, தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ள அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த இரகசிய விசாரணை தொடர்பான மேலதிக அறிக்கைகள் கடந்த காலங்களில் கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இன்று காலை பேலியகொட பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த சுரேஷ் சாலே?
மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சாலே 1987 மார்ச் 16இல் இராணுவத்தில் இணைந்து, காலாட்படை மற்றும் சமிக்ஞை படையணிகளில் கடமையாற்றினார். பின்னர் அவரது மொழித்திறன் மற்றும் செயற்திறன் காரணமாக 1993 இல் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு உள்வாங்கப்பட்டார்.
2012 ஒக்டோபர்: பாதுகாப்பு அமைச்சின் வௌிநாட்டுப் புலனாய்வு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி, பின்னர் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2016 - 2018: மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அமைச்சர் ஆலோசகராகப் பணியாற்றினார்.
2019 ஜனவரி - நவம்பர்: டெல்லியில் தேசிய பாதுகாப்பு கற்கைகளை மேற்கொண்டார்.
2019 டிசம்பர் முதல்: இலங்கையின் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளராகப் பொறுப்பேற்றார்.
2024 இறுதி: குறித்த பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
தற்போது அவர் மிலிந்த மொரகொட தலைமையிலான 'பாத்ஃபைண்டர்' (Pathfinder) சர்வதேச அமைப்பின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராகக் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பேராசிரியர் ரோஹன் குணரத்ன விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு, ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமையானது பாரிய அநீதியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"இலங்கையின் மிகவும் கௌரவமான தேசிய பாதுகாப்பு நிபுணர்களில் ஒருவரான ஜெனரல் சுரேஷ் சலே, 2026 பெப்ரவரி 25 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். அரச புலனாய்வு சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய அவர், தனது முழு வாழ்நாளையும் இலங்கையைப் பாதுகாப்பதற்காகவே அர்ப்பணித்தார்.
”மூன்று தசாப்தங்களாக ஐந்து அரசாங்கங்களின் கீழ் பணியாற்றிய அவர், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்காக வழங்கிய தன்னலமற்ற பங்களிப்புக்காக சர்வதேச புலனாய்வு சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டவர். எவராலும் களங்கப்படுத்த முடியாத தூய்மையான சேவைப் பதிவை அவர் கொண்டுள்ளார். ஜெனரல் சலேயின் முதன்மையான நேசிப்பு இலங்கையும் இலங்கை மக்களுமே தவிர, அவரது குடும்பம் அல்ல.
ஜெனரல் சலே எவ்வித தவறும் செய்யாதவர் என்பதோடு, 2019 ஏப்ரல் 21 தாக்குதலுடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் அவர் மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிவிட்டு, இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (NDC) கல்வி பயின்று கொண்டிருந்தார்.
“ஜெனரல் சாலேயின் கைது அரசியல் நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குக் காரணமான கவனக்குறைவுக்காக அவரைக் கைது செய்ததன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஜெனரல் சலேயின் கைதை இரண்டு தரப்பினர் கொண்டாடுகின்றனர். முதலாவது தரப்பு, உயிர்த்த ஞாயிறு படுகொலையைச் செய்த பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள். இரண்டாவது தரப்பு, தாக்குதல் குறித்து போலித் தரவுகளையும் சதித் திட்டக் கோட்பாடுகளையும் உருவாக்கி இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது பழி சுமத்தும் அரசியல் தீவிரவாதிகள்.
'இலங்கையின் உயிர்த்த ஞாயிறு படுகொலை - சர்வதேச சமூகத்திற்கான பாடங்கள்' என்ற நூலின் ஆசிரியர் என்ற வகையில், நான் இந்தத் தாக்குதலை மிக விரிவாக ஆராய்ந்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளேன். எனது கண்டுபிடிப்புகள் FBI, ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ், ஸ்கொட்லாண்ட் யார்ட் மற்றும் இன்டர்போல் ஆகியவற்றின் விசாரணை அறிக்கைகளுடன் ஒத்துப்போகின்றன.
இலங்கைத் தலைவர்கள் தேசிய பாதுகாப்புடன் விளையாடக் கூடாது. தேசத்தைப் பாதுகாப்பதில் இருதரப்பு அணுகுமுறை இருக்க வேண்டும். அதுவே முதிர்ச்சியடைந்த ஆட்சியின் அடையாளமாகும்."