உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கில் அடுத்தடுத்தத் திருப்பங்கள்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கில் அடுத்தடுத்தத் திருப்பங்கள்!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற சமயம், தெமட்டகொட - மஹவில கார்டன்ஸில் உள்ள வீட்டில் குண்டு வெடிப்பு இடம்பெற்றபோது, அங்கு வசித்துவந்த இரண்டாவது சந்தேகநபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரது வீட்டிலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் உள்ளிட்ட சொத்துக்களை, அவரது சகோதரரான இப்லால் அஹமட்டிடம் ஒரு வாரத்திற்குள் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.

முன்னைய நீதவானினால் இதற்கான ஆட்சேபனைகளை முன்வைக்கப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதவான் சுட்டிக்காட்டினார். அவ்வாறு சொத்துக்களை விடுவிக்கத் தவறினால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதவான் எச்சரிக்கை விடுத்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் மற்றும் தெமட்டகொட வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த இன்ஷாப் அஹமட் ஆகியோரின் சகோதரரும், இன்ஷாப் அஹமட்டின் மனைவியான ஜிப்ரி பாத்திமாவின் மைத்துனருமான இப்லால் அஹமட் என்பவரே குறித்த சொத்துக்கள் தனக்குச் சொந்தமானது எனக் கூறி சட்டத்தரணி ஊடாக அதனை விடுவிக்குமாறு கோரியிருந்தார். இக்கோரிக்கையை பரிசீலித்தே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னைய நீதவான் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக மற்றுமொரு நீதவான் அறிக்கை ஒன்றைக் கோரியிருந்த போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்த உத்தரவையும் உதாசீனம் செய்து செயற்பட்டுள்ளதாக நீதவான் இதன்போது அதிருப்தி வெளியிட்டார்.

இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னர், இது குறித்து ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர்கள் எவ்விதக் கருத்தையும் முன்வைத்திருக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை உதாசீனம் செய்வது அல்லது தட்டிக்கழிப்பது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதால், ஒரு வார காலத்திற்குள் குறித்த பொருட்களை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதவான் தனது உத்தரவில் மீண்டும் வலியுறுத்தினார்.

குறித்த பொருட்கள் தற்போது மத்திய வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அதனை விடுவிப்பதற்கு மேலதிக கால அவகாசம் கோரியது. எனினும், ஒரு வார காலத்திற்குள் அவை விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் நீதவான் உறுதியாகத் தீர்ப்பளித்தார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை விசேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இலங்கையின் நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி, சந்தேகநபர் ஒருவர் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிரான சாட்சியமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரே சட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டமாகும். இவ்வாறானதொரு பின்னணியில், அத்தகைய சாட்சியத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளமையானது ஒரு அரிய சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது.

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (TID) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரால் பெறப்பட்ட இந்த ஒப்புதல் வாக்குமூலம் நம்பகத்தன்மையற்றது எனக் குறிப்பிட்டு, நீதியரசர்களான நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூவர் அடங்கிய நீதாய மேல் நீதிமன்ற அமர்வு இதனை நிராகரித்துள்ளது.

நேற்று (24) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கின் 8 ஆவது பிரதிவாதியான அப்துல் மனாப் மொஹமட் சிறிதாவுஸ் என்பவரால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிபதிகள் நிராகரித்தனர். அத்துடன், குறித்த வாக்குமூலத்தின் சுயாதீனத்தன்மை குறித்தும் நீதிமன்றம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கு அமைவாக, சந்தேகநபர் ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒரே சட்ட ஏற்பாடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான கைதுகளின் போது மாத்திரமே காணப்படுகிறது. இவ்வாறான நிலையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வாக்குமூலம் நம்பகத்தன்மையற்றது என விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளே பகிரங்கமாக அறிவித்துள்ளமையானது, இலங்கையின் சட்ட வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் எனப் பிரபல சட்ட நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 268 பேரின் உயிர்களைப் பலிகொண்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்தபோது உயிரிழந்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசரின் உத்தரவுக்கமைய, இவ்வழக்கு விசாரணைகள் வாரத்தின் ஒவ்வொரு வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொழும்பு 7, புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள விசேட நீதிமன்றக் கட்டடத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி