உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்டார்.
இதற்கமைய, அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குரிய தடுத்து வைப்பு உத்தரவின் கீழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான மிலேச்சத்தனமான தீவிரவாதிகள் குழுவினால் நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட 10 தற்கொலைத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாகப் பாரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த விசாரணைகளில் வௌிப்படுத்தப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில், தாக்குதலை நடத்திய குழுக்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தற்போது வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் 'அரசியல் கை' (Political Hand) ஒன்று இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வந்தனர்.
இதற்கிடையில், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில், ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிரித்தானியாவின் 'செனல் 4' (Channel 4) ஆவணப்படத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானின் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றி, தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ள அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த இரகசிய விசாரணைகள் குறித்த விபரங்கள் கடந்த காலங்களில் கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, முன்னாள் அரச புலனாய்வுப் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே இன்று காலை 8.10 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு "ஆதரவு வழங்கியமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை" ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு அவர் பணி நிமித்தம் சென்றுகொண்டிருந்த போதே வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அத்துடன், அவர் பயன்படுத்திய கணினிகள், அவரது இல்லம், வங்கி கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் ஆகியவற்றைச் சோதனையிடவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சில தகவல்கள் சுரேஷ் rாலேவுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததா? அவ்வாறாயின் அது குறித்து அவர் உரிய தரப்பினருக்கு அறிவிக்கத் தவறியுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் சில முக்கிய நபர்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.