உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்குப் இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என கொழும்பு மறைமாவட்ட ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமிணி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (பெப்ரவரி 26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே நேற்று (பெப்ரவரி 25) கைது செய்யப்பட்ட பின்னணியிலேயே இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
உயிர்த்த தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்படும் சந்தேகநபர்களுக்காக சமூக ஊடகங்களில் அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை இட வேண்டிய அவசியம் இல்லையென அருட்தந்தை சிறில் காமிணி தெரிவித்தார்.
இச்சம்பவத்தை அரசியல்மயப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட அவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்படும் விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு இடமளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
"தற்போது இடம்பெற்றுள்ள கைதுகள் குறித்து பல்வேறு வியாக்கியானங்களை வழங்கி, சமூகத்தில் தவறான நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் கட்டியெழுப்ப எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் நாம் வன்மையாக நிராகரிக்கின்றோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாட்டை விளக்கிய அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:
"இது 300 உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாஸ்கு ஞாயிறு திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். இதில் அனைத்து மதங்களையும் இனங்களையும் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது ஒரு பாரிய இனப்படுகொலை.
“இந்தத் தாக்குதலின் பின்னாலுள்ள உண்மையை கண்டறிவதென்பது, இந்நாட்டின் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்.
“அவ்வாறு இல்லையெனில், சட்டத்தின் மீது பயமில்லாத நிலை ஏற்படும். குற்றங்களைச் செய்துவிட்டு தலைமறைவாக இருக்க முடியும் என்ற எண்ணம் உருவாகும். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
“இவ்வாறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மற்றும் இந்த கைதுகளுக்குப் பல்வேறு வியாக்கியானங்களை வழங்குபவர்களைப் பார்க்கும்போது, அவர்களின் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் என்ன என்பது புரிகிறது.
“எனவே, இதனை அரசியல்மயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு சுயாதீன விசாரணை. அதனை அவ்வாறே முன்னெடுக்க விடுவதே சிறந்தது.
“மாறாக, இந்த விசாரணைகளை சீர்குலைக்க எடுக்கும் முயற்சிகளை, இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் அங்கவீனமுற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நாம் கருதுகின்றோம்.
“எனவே, இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம். விசாரணைகள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதன் மூலம் உரிய பெறுபேறு கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்.
“பலராலும் பேசப்படும் அரசியல் சதித்திட்டம் இதில் காணப்பட்டதா இல்லையா? அவ்வாறு இருந்திருப்பின் அதனைச் செய்தது யார்? இத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? போன்ற உண்மைகளை நாம் நிச்சயமாகக் கண்டறிய வேண்டும்.
“யாராவது இதற்குத் தடையாக இருந்தால், அதனைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் பெரும் குற்றமாகவே நாம் கருதுவோம். எனவே தயவுசெய்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து, பொறுமையுடன் அவதானித்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என்றார்.