அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளுக்கு எதிரான மனுக்களை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!

அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளுக்கு எதிரான மனுக்களை நிராகரித்தது உயர்நீதிமன்றம்!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளியைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர் குமுதினி விக்ரமசிங்க மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டன.

மனுக்கள் தொடர்பான சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், குறித்த மனுக்களை முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதியை மறுத்ததுடன், அவற்றை ஆரம்பக்கட்டத்திலேயே தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கையில்; நாட்டில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதியினால் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான அவசர காலங்களில் தீர்மானங்களை எடுப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படக் கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.

மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சுரேன் பெர்னாண்டோ மற்றும் திஷ்ய வேரகொடை ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி