“ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட எனது பாதுகாப்பு வலையமைப்பை சி.ஐ.ஏ உளவுச்சேவை கபளீகரம் செய்தது” - கோட்டாபய ராஜபக்ஷ!

“ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட எனது பாதுகாப்பு வலையமைப்பை சி.ஐ.ஏ உளவுச்சேவை கபளீகரம் செய்தது” - கோட்டாபய ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் நெருக்கமான அதிகாரிகள் அமெரிக்க மத்திய உளவுச் சேவையான சி.ஐ.ஏ (CIA) அமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக அசாங்க அபேகுணசேகர விசேட வெளிப்படுத்தலொன்றைச் செய்துள்ளார்.

ஓஸி அபேகுணசேகரவின் புதல்வரான அசாங்க அபேகுணசேகர, அண்மையில் யூடியூப் (YouTube) தளத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே இந்த அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.

2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அசாங்க அபேகுணசேகர, பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

தற்போது அவர் வொஷிங்டனை தளமாகக் கொண்ட தெற்காசிய தொலைநோக்கு வலையமைப்பின் (South Asian Foresight Network) நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், ‘மிலேனியம்’ திட்டத்தின் சிரேஷ்ட உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.

அசாங்க அபேகுணசேகரவின் கூற்றுப்படி, கோட்டாபய ராஜபக்ஷவின் முழுமையான பாதுகாப்பு வலையமைப்பும் சி.ஐ.ஏ அமைப்பினால் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த விடயத்தை கோட்டாபய ராஜபக்ஷவே தன்னிடம் நேடியாகக் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலுக்குப் பின்னர் பல நாட்கள் கடந்துள்ள போதிலும், அசாங்கவின் இந்த கருத்துக்களை அவர் இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க உளவுச் சேவையின் தேவைக்கு ஏற்ப செயற்பட்டமையினாலேயே தான் ஜனாதிபதி பதவியை இழக்க நேரிட்டதாக கோட்டாபய கருதுகின்றார்.

குறிப்பாக, கோட்டாபயவின் ஆட்சிக் காலத்திலும் தற்போதைய ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலும் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஜெனரல் கமல் குணரத்ன, சி.ஐ.ஏ அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஒருவராக இதில் பெயரிடப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவைச் சுற்றி இருந்த ஆலோசகர்கள் பலர், மிலிந்த மொரகொடவினால் நடத்தப்படும் ‘பத்ஃபைண்டர்’ என்ற அரச சார்பற்ற நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என அசாங்க மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதியும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமான அட்மிரல் ஜெயந்த கொழம்பகே சி.ஐ.ஏ அமைப்பினால் வசப்படுத்தப்பட்ட மற்றொருவர் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (25.02.2026) கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அக்காலப்பகுதியில் பத்ஃபைண்டர் நிறுவனத்திலேயே பணியாற்றி வந்தார். இந்த சி.ஐ.ஏ நடவடிக்கைகளை சுரேஷ் சலே அறிந்திருக்கக்கூடும் என்பதையும் அசாங்க அபேகுணசேகர சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், 2029 ஜனாதிபதித் தேர்தலில் மிலிந்த மொரகொடவை பொது வேட்பாளராகக் களமிறக்குவது குறித்து எதிர்க்கட்சிக் குழுக்களிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்பு வலையமைப்பிற்குள் சர்வதேச உளவுச் சேவையொன்று ஊடுருவியிருப்பது உண்மையானால், அது இலங்கையின் பாதுகாப்புப் படையினரிடையே அமெரிக்காவின் செல்வாக்கு எந்தளவு பலமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு பாரிய சவாலாகவும் பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அசாங்க அபேகுணசேகரவின் இந்த கருத்துக்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி