யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள
நிலையில், மார்ச் 25 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ். வலிகாமம் கிழக்கு, புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி, தற்போது யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றி வருகின்றார்.
கல்வித்துறையிலும் நிர்வாகத் துறையிலும் நீண்டகால அனுபவம் கொண்ட இவர், பல்கலைக்கழக சமூகத்தில் மதிப்புக்குரிய ஒருவராகத் திகழ்கின்றார்.
துணைவேந்தர் பதவிக்காக கடந்த செப்டெம்பர் மாதம் பல்கலைக்கழகப் பதிவாளரால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பீடுகளில் அதிக புள்ளிகளைப் பெற்று பேராசிரியர் வேல்நம்பி முதலிடத்தைப் பிடித்திருந்தார்.
குறிப்பாக, கடந்த மூன்று தடவைகளாக இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தல்களிலும் இவர் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்படும் மூவரில் ஒருவரைத் துணைவேந்தராக நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் பரிந்துரைகளுக்கமைய, ஜனாதிபதி இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.