இம்முறை UNHRC கூட்டத்தொடரில் இருந்து தப்பிய இலங்கை!

இம்முறை UNHRC கூட்டத்தொடரில் இருந்து தப்பிய இலங்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 61ஆவது கூட்டத்தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.

கடந்த திங்கட்கிழமை 23ஆம் திகதி ஆரம்பமான இந்த நீண்ட கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இந்தக் கூட்டத் தொடரில்

இல்லை என்பது தெரிந்ததே. இலங்கை விவகாரம் இந்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் இல்லை.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 60ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கை நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தீர்மானத்தை மேலும் இரு வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்கு அப்போது தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா .மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 63ஆவது கூட்டத் தொடரிலும், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 66ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும்.

ஆகவே இம்முறை நடைபெற்றுடாது என்பதுடன் விவாதங்களும் இடம்பெறா. அதனால் ஈழத்து அரசியல் தலைகளையோ, பிரமுகர்களையோ இந்த நடப்புக் கூட்டத் தொடரின்போது ஜெனிவாவில் காண முடியாது.

ஆயினும், பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் Jeunesse Etudiante Tamoule எனும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பக்க நிகழ்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் விடயத்தில் தற்போதைய புதிய தேசிய மக்கள் சக்தி அரசும் முன்னைய அரசுகள் போல பல வாக்குறுதிகளை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு வழங்கி உள்ள போதிலும், அவை தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எதுவும் களத்தில் - நாட்டில் - இதுவரை முன்னெடுக்கப்படவே இல்லை என்ற உண்மை நிலைவரம் நாளை நடைபெறும் பக்க நிகழ்வில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தக் கூட்டத்திலும் இலங்கை அரசு சார்பு பிரதிநிதிகள் பங்குபற்றி வழமையான சமாளிப்பு கருத்துக்களை முன்வைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

கவுன்ஸிலின் இந்த அமர்வில் இலங்கை சார்பில் பங்கேற்கும் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் தஸநாயக்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஏனைய நாடுகளின் விவகாரங்கள் தொடர்பான விவாதங்களின்போது இலங்கை சார்பில் கருத்துரைப்பர்.

நாளைய பக்க நிகழ்விலும் தேசிய மக்கள் சக்தி அரசைக் காபந்து பண்ண என்ன புளுகுரைப்பார்கள் என்பதைப் பார்த்திருப்போம்.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி