மக்கள் விடுதலை முன்னணி பயங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம், புதிய சட்டமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்.
இன்று ஆட்சிக்கு வந்ததும் அவர்களே இதற்கு ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாளை மட்டக்களப்பில் புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம், என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை தமிழரசுக்கட்சி வழங்கவுள்ளதுடன் பிரதேசசபை தவிசாளர்கள்,உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகச் சொல்லி ஆட்சி வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதை விடுத்து பயங்கரவாதம் தடைச் சட்டத்தையும் விட மோசமான சட்டத்தை பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரிலே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையிலே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கடந்த காலத்திலே நாங்கள் செயற்பட்டு வந்தோம்.
தொடர்ந்து வந்த அனைத்து அரசாங்களிடமும் பயங்கரதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்.அச்சட்டம் தேவையில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்ச்சியாக முன்வைத்து வந்தது.
கடந்த ரணில் விக்கிரமசிங்க காலத்திலும் ஏ.டி.ஏ என்ற பெயரிலே இதேபோல, ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட போது நாடு முழுவதும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரியும், பதிய சட்டம் தேவையிலை என்று கோரியும் கையெழுத்தப் போராட்டங்களை நாங்கள் நடத்தியிருந்தோம்.
அந்த வகையிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே நாளை காலை 09.00 மணியளவில் அமைப்புகள் பல இணைந்து இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம், மற்றும் புதிதாக உருவாக்கப்படும் சட்டம் என்பவற்றுக்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்க இருப்பதாக அறியக் கிடைத்தது. எங்கள் கட்சிக்கும் இப்போராட்டம் தொடர்பான அழைப்பு கிடைத்தது.
அந்த அடிப்படையில் நாளை காலை கல்லடிப் பாலத்தில் இருந்து காந்திப் பூங்கா வரை பேரணியாக இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளை முழுமையான ஆதரவை வழங்கும்.
எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
அந்த அந்த உளளுராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் பிரதேச உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அறிவித்து அவர்களையும் இந்த போராட்டத்திற்கு அழைத்து வர வேண்டும்.
கடந்த அரசாங்கம் சி.டி.ஏ என்ற பயங்கரவாத் தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். நாங்கள் அனைவரும் போராட்டஙகளில் ஈடுபட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று போராட்டம் நடத்தியதும், அந்த சி.டி.ஏ சட்டத்தைப் பின்வாங்கியது. ஆனால் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கின்றது.
அதே போன்று ரணில் விக்கிரமங்க காலத்தில் ஏ.டி.ஏ என்று சட்டம் கொண்டு வந்தார்கள் நாங்கள் போராடி அதனை வேண்டாம் என்றோம். கொண்டு வரப்பட இருந்த சட்டம் பின்வாங்கப்பட்டது. ஆனால் அதே பயங்கரவாதத் தடைச் சட்டம் அப்படியே இருக்கின்றது.
அதேபோல தான் இந்த பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று புதிய சட்டத்தைக் கொண்டு வந்து நாங்கள் இதனை வேண்டாம் என்று சொல்லும் போது அரசாங்கம் இதனை வாபஸ் பெற்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கப் பார்க்கின்றார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.
தற்போதை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் ஒருவரை விசாரிப்பதானாலும், கைது செய்வதானாலும் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் பொறுப்பில் இருக்க வேண்டும்.
ஆனால் இப்போது வர இருக்கும் புதிய சட்டத்தில் சாதாரண ஒரு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கூட இந்த புதிய சட்டத்தினூடாகக் கைது செய்யக் கூடியதாக இருக்கின்றது.
நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் புதியதோ, பழையதோ அதற்கு முழுமையான எதிரானவர்கள்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியாக இருந்தபோது இந்தச் சட்டத்தை முழுமையாக எதிர்த்து இந்தச் சட்டம் கூட்டத்தைப் பகிஸ்கரிப்பார்கள்.
தமிழரசுக் கட்சி நாங்களாவது இச்சட்டத்தில் உள்ள் விடயங்கள் என்ன என்று அறியும் நோக்கில் கூட்டங்களில் கலந்து கொள்வோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம், புதிய சட்டமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள்.
இன்று ஆட்சிக்கு வந்ததும் அவர்களே இதற்கு ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே மட்டக்களப்பில் நாளைய தினம் நடைபெறும் போராட்டத்திற்கு எமது கட்சியின் உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டு புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் வேண்டாம், அதே நேரத்தில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்ற அந்த செய்தியைச் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.