விஜய் - சங்கீதா விவாகரத்தில் சட்டச் சிக்கல்?

விஜய் - சங்கீதா விவாகரத்தில் சட்டச் சிக்கல்?

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

சங்கீதா தாக்கல் செய்த மனுவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

'கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்தேன். அந்த உறவை விட்டுவிடுவதாக விஜய் உறுதி கொடுத்தார். ஆனால், மீண்டும் அதே உறவில் நீடித்தார்.

விஜய்யும் அந்த நடிகையும் வெளிநாடுகளுக்கு பல முறை ஒன்றாக பயணம் செய்தனர்.

அந்தப் புகைப்படங்களை நடிகை தனது சோசியல் மீடியாவில் பல முறை பதிவிட்டார்.

விஜய் அதற்கு எதிர்ப்போ ஆமோதிப்போ தெரிவிக்கவே இல்லை. என்னை மனரீதியாக புண்படுத்தி வீட்டிலேயே தனிமைப்படுத்தினார்.

இந்த விவகாரத்தை கவுன்சலிங் மூலம் தீர்த்துவிட முடியும் என நம்பினேன். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை.

குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுப்பதை ஒத்திவைத்தேன்.

விஜய்யின் அந்த திருமணத்தை மீறிய உறவு தொடர்ந்தது எங்களின் திருமண பந்தத்தின் மீதான நம்பிக்கையை குலைத்தது.

செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை கவுன்சலிங் மூலமாக இந்த விவகாரத்தை பேசி தீர்வு காண நினைத்தோம். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கு அனைத்து தரப்பினருடைய கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு இப்போது வரை நடிகையின் பெயரை வெளியில் கூறவில்லை. ஆனால், தேவை ஏற்படும்பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியோடு அவரின் பெயரையும் மனுவில் சேர்க்கும் உரிமை உண்டு.

இப்போது வெறும் காகிதத்தில் மட்டுமே எங்களின் திருமண பந்தம் தொடர்கிறது.

மீண்டும் இணைய முடியாத அளவுக்கு எங்களின் பந்தம் உடைந்துவிட்டது.

பொதுவெளியில் இந்த விவகாரம் பூதாகரமாக மாறக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை கவுன்சலிங் மூலம் சுமுகமான தீர்வை எட்ட முயன்றேன். ஆனால், விஜய் தீர்வை எட்ட முயற்சிக்காமல் அவரின் மனைவி என்ற முறையில் நான் அனுபவித்து வரும் பொருளாதார அம்சங்களின் மீது கட்டுப்பாடை விதிக்க ஆரம்பித்தார்.

கடைசியாக 9.11.2025 அன்று கூட பரஸ்பர ஒப்புதலோடு இந்த பந்தத்திலிருந்து விலகவும் அதற்கான உரிமை விவகாரங்கள் சார்ந்து பேசவும் முற்பட்டேன். பொதுவெளியில் அவருக்கு இருக்கும் பிம்பத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என நினைத்தேன். ஆனால், எந்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாமல் போகவே விஜய்தான் என்னை நீதிமன்றம் நோக்கி தள்ளியுள்ளார்.

மன உளைச்சலையும் அவமதிப்பையும் கொடுக்கும் இந்த திருமண பந்தத்தில் இனியும் தொடர முடியாது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே விஜய் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக கடந்த 2 மாதங்களில் சிபிஐ வழக்கு, ஜனநாயகன் திரைப்பட விவகாரம் என, நீதிமன்றத்தால் சிக்கலை எதிர்க்கொண்டு வருகிறார். இப்படி இருக்கையில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பது, விஜய்க்கு நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.

கரூர் நெரில் பலி தொடர்பான வழக்கு முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விஜய் குறித்து நீதிமன்றம் சொல்லியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு முன்னர், தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியல் லாபத்திற்காக மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது என்றும் கடுமையாக சாடியிருந்தது.

மட்டுமல்லாது பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கிவிட்டால் அத்துடன் எல்லா கடமைகளும் முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடாது என்று சொன்ன நீதிமன்றம், குறிப்பிட்ட அளவு மக்களை மட்டுமே தாங்கும் இடத்தில், அதிக அளவில் மக்களை திரட்டியது ஏன்? என்று கேள்வி எழுப்பியது.

மேலும் இந்த துயரத்திற்கு கட்சியின் தலைவர், அதாவது விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னது. இத்துடன் நீதிமன்றம் நிற்கவில்லை. வெறும் கைத்தட்டல்களுக்காக மக்களை அழைத்து வந்து ஆபத்தில் தள்ளுவது வேதனைக்குரியது என்றும் சாடியிருந்தது.

ஜனநாயகன் வழக்கு

இதனை தொடர்ந்து அவர் சிக்கிய மற்றொரு வழக்கு, ஜனநாயகன் திரைப்படம்தான். திரைப்படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் விஜய் தரப்பு நீதிமன்றத்தை நாடியிருந்தது. ஆரம்பத்தில் என்னவோ விஜய்க்கு ஆதரவாகத்தான் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தது. ஆனால், இதனை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ரத்து செய்தது. பின்னர் நடந்த விசாரணையில் தணிக்கை வாரியத்தின் சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது.

ஐடி அபராதம்

இதனையடுத்து, சம்பளத்தை கணக்கு காட்டாததால் வருமான வரித்துறை விதித்த அபராதத்தை ரத்து செய்ய கோரி, விஜய் நீதிமன்றத்தை நாடியிருந்தார். அந்த வழக்கிலும் விஜய்க்கு பின்னடைவுதான் ஏற்பட்டது. விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும் என்று நீதிமன்றம் சொல்ல.. விஜய் தரப்பு கடும் பின்னடைவை சந்தித்தது.

இந்நிலையில், தற்போது விவாகரத்து கோரி விஜய்யின் மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்குக்காக விஜய் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கலின் போது விஜய் செய்ய வேண்டியது என்ன?

இது தொடர்பாக குடும்ப நல வழக்கறிஞர் ஒருவர் அளித்த பேட்டியில்,

"அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களை பொது விஷயங்களை விவரிக்க முடியாது. அதை பற்றி பேச முடியாது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது மனைவியின் விவரங்களை காட்ட கூடாது என்பதற்காக இப்படி செய்கிறாரா? வருமானத்தை மறைக்க இப்படி செய்கிறாரா? என்றெல்லாம் கேட்க முடியாது. ஏனென்றால் அவர் பப்ளிக் சர்வெண்ட் கிடையாது. அதனால் அவர் சொத்தை மறைக்க இப்படி செய்கிறார் என்று சொல்ல முடியாது. அவர்கள் விவாகரத்து செய்ய தனிப்பட்ட காரணங்கள்தான் இருக்கும்.

விவாகரத்து செய்ய முடிவு

சொந்த காரணங்களால்.. சொந்த சுதந்திரம் காரணமாக இவர்கள் விவாகரத்து செய்யலாம். தனிமனித சுதந்திரத்தை கெடுத்துக்கொண்டு வாழ வேண்டமா என்று நினைத்துக்கொண்டு இவர்கள் விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் .. அரசியல் தலைவர்களால் அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாது. அதுவே கூட குடும்ப பிரச்சனைகளுக்கான காரணமாக அமைந்திருக்கும்," என்று கூறியுள்ளார்.

விவாகரத்து வாங்கும் வரை மனைவி

மேலும் அவர், "விஜய்க்கு இப்போதும் சங்கீதாதான் மனைவி. அவர் வேட்புமனு தாக்கல் செய்தால் சட்டப்படி மனைவியின் விவரங்களைத்தான் கொடுக்க வேண்டும். விவாகரத்து வாங்கும் வரை மனைவி என்றுதான் கூற வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை மனைவி சங்கீதாதான். சங்கீதாவின் சொத்து விவரங்களை அவர் கொடுத்தே ஆக வேண்டும். அவர் தன்னை பிரிந்து வாழ்கிறோம் என்று சொல்லலாம்.. ஆனால் சட்டப்படி அவர் வேட்புமனுவில் மனைவி என்றே குறிப்பிட வேண்டும்," என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதற்கிடையே சங்கீதாவின் விவாகரத்து மனு குறித்து வலைதளங்களில் சில விவாதங்கள் எழுந்துள்ளன.

சங்கீதா ஒரு லண்டன் வாழ் தமிழ் பெண்மணி. இலங்கையை பூர்வீகமாக கொண்டாலும் சங்கீதா லண்டனில் பிறந்து வளர்ந்தவர்.

விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, பின்னாளில் அவருடைய வாழ்க்கைத் துணையாக மாறியவர்.

இவருடைய தந்தை சொர்ணலிங்கம் லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர். பிறப்பால் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சங்கீதா, இந்தியாவில் விவாகரத்து பெற முடியுமா என்கிற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.

இந்த விஷயங்களுக்கு சங்கீதாவின் விவாகரத்து மனுவில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் விவாகரத்து கோரியுள்ள சங்கீதா, தனது மனுவில் 4வது குறிப்பில், "திருமணம் முதன்முதலில் 10.07.1998 அன்று யுனைடெட் கிங்டம் எனப்படும் இங்கிலாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டது என்றும் அதன் பிறகு, 25.08.1999 அன்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் இந்து முறைப்படி சடங்குகளுடன் திருமணம் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டதற்கான விவரங்கள் தன்னிடம் உள்ளதாகவும், சென்னையில் நடைபெற்ற திருமணப் பதிவு விவரங்கள் நடிகர் விஜய்யிடம் உள்ளதாகவும், அவற்றை அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்றும் சங்கீதா தரப்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தான் இங்கிலாந்து குடிமகள் என்பதை மனுவில் வெளிப்படுத்தியுள்ள சங்கீதா, லண்டனில் பி.எஸ்சி பட்டம் பெற்று, திருமணத்திற்குப் பிறகு, முதலில் சாலிகிராமத்திலும், பின்னர் அடையார் கஸ்தூரிபா நகரிலும், இறுதியாக நீலாங்கரை ஸ்ரீ கபாலீஸ்வரர் நகரிலும் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்ததாகவும், தற்போதும் அங்கேயே வசித்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேநேரம் விஜய் இந்திய குடிமகன் என்பதையும் சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் - சங்கீதா விவாகரத்து விஷயம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருக்கும் சட்ட சிக்கல் குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன.

மேலதிகமாக சங்கீதா 1954ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்து தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி