ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவரைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இந்த அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் புதிய மற்றும் விரிவான விசாரணைகளின் ஒரு கட்டமாக, கடந்த புதன்கிழமை (25) முற்பகல் பேலியகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.
தாக்குதல் தாரிகளுடன் இருந்த தொடர்புகள் அல்லது அது குறித்த புலனாய்வுத் தகவல்களைக் கையாண்ட விதம் தொடர்பாக இவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.