சுரேஷ் சலே மீதான ஐந்து குற்றச்சாட்டுக்கள்!

சுரேஷ் சலே மீதான ஐந்து குற்றச்சாட்டுக்கள்!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான துவான் சுரேஷ் சாலி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த புதன்கிழமை (25) கைது செய்யப்பட்டார்.

தாக்குதல்தாரிகளின் முந்தைய நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளிவருவதைத் தடுத்தமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவரின் ஊடாக, சந்தேகத்திற்குரிய நான்கு முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் குறித்த உணர்வுப்பூர்வமான தகவல்களைச் சேகரித்தமை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர், தாக்குதல்தாரிகள் குறித்த தகவல்கள் வெளியாகி வந்த வேளையில், அவை வெளிவருவதைத் தடுக்கும் வகையில் சூட்சுமமாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே முன்னாள் அரச புலனாய்வுப் பிரதானி கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல்தாரிகளின் உறவினர்கள் உள்ளிட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளால் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில், மகேந்திரன் புலஸ்தினி என்ற 'சாரா ஜஸ்மின்' என்பவரும் அந்த வெடிவிபத்தில் உயிரிழந்ததாக நம்ப வைப்பதற்கு நேரடியாகத் தலையிட்டமை, குறித்த பெண் தொடர்பான தகவல்களை மறைத்தமை, தாக்குதல்தாரிகளின் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படுவதைத் தடுத்தமை மற்றும் தாக்குதலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி ஒத்தாசை புரிந்தமை மற்றும் சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் கைது செய்யப்படக் காரணங்களாக அமைந்தன என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் கடந்த புதன்கிழமை (25) பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவரிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி