புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சாலேவைக் கைது செய்வது புலிகள் டயஸ்போராவை மகிழ்விக்கும் ஒரு கீழ்த்தரமான காட்டிக்கொடுப்பு.
இராணுவ வீரர்களை வேட்டையாடி அரசைக் கவிழ்க்கும் சதிக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் அணிதிரள வேண்டும்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து எச்சரித்த சாலே சிறையில் - தாக்குதலுக்கு உதவிய இப்ராஹிம்கள் சுதந்திரமாக; அரசாங்கத்தின் இரட்டை வேடம் அம்பலமாகிறது.
மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சாலேவைக் கைது செய்வது என்பது நாட்டின் தேசிய பாதுகாப்பையும், அரசின் இருப்பையும் பலவீனப்படுத்தி, தமிழ் டயஸ்போராவின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு "அரசியல் நடவடிக்கை" என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை வலியுறுத்தினார்.
யுத்த காலத்தில் எல்.டி.டி.ஈ. தலைவர் தமிழ்ச்செல்வன் போன்ற இலக்குகள் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்கி, நாட்டுக்காகச் சிறப்பான சேவையாற்றிய அதிகாரியை இவ்வாறாக வேட்டையாடுவதைக் கண்டிப்பதாக வீரவன்ச அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதிகளின் செயற்பாடுகள் குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாப்புச் சபைக்கு முதலில் எச்சரித்தது சுரேஷ் சாலேதான் என்றும், அன்று அந்தத் தகவல்களைப் புறக்கணித்தவர்கள், இன்று எச்சரித்த நபரையையே குற்றவாளியாக்க முயற்சிப்பது வேடிக்கையானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் வடக்கு - கிழக்கு இராணுவ முகாம்களை அகற்றுவதன் மூலமும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைச் சிறையிலடைப்பதன் மூலமும் தேசிய பாதுகாப்பைப் பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
"அதி தீவிர பிற்போக்குத்தனமான ஆட்சியாளர் கூட சுதந்திர தின அணிவகுப்பின் போது ரணவீரர்கள் ஆற்றிய சேவையைப் பற்றிப் பேசுவதைத் தடை செய்யவில்லை. ஆனால், இன்று 'ரணவீர' என்ற வார்த்தையைக் கேட்கும்போதே ஜனாதிபதியின் உடல் துடிக்கிறது," என்று வீரவன்ச தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட இப்ராஹிம் போன்ற நபர்களின் சொத்துக்களை விடுவித்து, அவர்களை "சுத்திகரிப்பு" செய்யும் வேளையில், நாட்டுக்காகத் தம் உயிரைப் பணையம் வைத்த சாலே போன்ற அதிகாரிகளைச் சிறையில் அடைப்பதற்குப் பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
மேஜர் ஜெனரல் சாலேவை விடுவிக்கும் வரை இந்தப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும், தோற்கடிக்கப்பட்ட பயங்கரவாதிகளை மகிழ்விக்கும் இந்த இழிவான செயலுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் அணிதிரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விமல் வீரவன்ச தனது உரையைத் தொடங்குகையில், தேசிய சுதந்திர முன்னணி எப்போதும் அரசியல் ரீதியாகத் தேசப்பற்றுள்ள நிலைப்பாட்டில் இருந்துகொண்டு, நாட்டின் பாதுகாப்புப் படைகளைப் பலப்படுத்துவதற்கும், பிரிவினைவாத பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கும் தீவிரமாகப் பங்களிப்புச் செய்துள்ளதை நினைவுபடுத்தினார்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கைப் பிரித்தெடுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுக்கொள்வதற்குத் தனது கட்சி முன்னோடியாகச் செயற்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
அரசிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் ஏற்படும் அச்சுறுத்தல்கள்:
அரசு என்பது ஒரு நல்ல வாழ்விற்காகவே இருப்பதாகவும், அதற்கு அமைதி மிக அவசியமான நிபந்தனை என்றும் வீரவன்ச கூறினார். ஆனால், தற்போதைய ஆட்சியின் கீழ் அரசின் தூண்கள் ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மகா சங்கத்தினரை இழிவுபடுத்துதல் மற்றும் தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்துதல் இதன் முக்கிய அங்கங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளில் இராணுவ முகாம்களை அகற்றுவது அல்லது பலவீனப்படுத்துவது தமிழ் டயஸ்போராவின் தேவைகளை நிறைவேற்றும் செயல் என்று அவர் கூறினார்.
இராணுவ வீரர்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவு மீதான வேட்டை:
பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் மன உறுதியைக் குலைக்கும் திட்டமிட்ட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் புலனாய்வு அதிகாரிகளுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ள போதிலும், இலங்கையில் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவதாகவும், இதன் விளைவாக கடற்படை புலனாய்வுப் பிரிவின் ஆள் பலம் மூன்றில் ஒன்றாகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் பங்கு:
மேஜர் ஜெனரல் சாலே யுத்தத்தின் போது ஆற்றிய பங்கு மிகப்பெரியது என்றும், தமிழ்ச்செல்வன் கொல்லப்படுவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்கியது அவரே என்றும் வீரவன்ச குறிப்பிட்டார்.
புலனாய்வுப் பிரிவினர் எதிரியின் உட்புறத்தில் இருந்து செயற்படுவதால், அவர்களுக்குப் பல்வேறு நபர்களுடன் தொடர்புகள் பேண வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.
சஹ்ரான் உள்ளிட்டோர் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) உடன் தொடர்புடையவர்கள் என்று முதலில் எச்சரித்தது சாலே தலைமையிலான குழுவினர் தான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதி இலக்கு கோட்டாபய!
சுரேஷ் சாலேவைக் கைது செய்வது முழுமையான அரசியல் வேட்டை என்றும், இது புலி டயஸ்போராவை மகிழ்விக்க எடுக்கப்பட்ட படி என்றும் வீரவன்ச வலியுறுத்தினார்.
இப்ராஹிம் போன்றோரின் சொத்துக்கள் விடுவிக்கப்படும் போது, நாட்டைப் பாதுகாத்த புலனாய்வு அதிகாரி சிறையில் அடைக்கப்படுவது கீழ்த்தரமான காட்டிக்கொடுப்பு என்று கூறிய அவர், இந்தச் செயலின் இறுதி இலக்கு கோட்டாபய ராஜபக்ஷவே என்றும் தெரிவித்தார்.