Live
Puthiya Kural Radio Tamil 24/7 Live Stream from Canada
Full Player

சலேவின் கைது இனவாதக் கருத்துக்களும்!

சலேவின் கைது இனவாதக் கருத்துக்களும்!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பனிப்பாளர் மேஜர் ஜென்ரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட விடயங்களை ஒட்டி இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கூறியிருக்கின்ற எதிர்வு கூறல்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

சுரேஷ் சலேவுக்கு அடுத்த இலக்கு முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக் ஷவே என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குறிப்பிடுவது வெறும் அரசியல் கூற்றல்ல.

அதே போலவே இந்தக் கைது பெரும் சுனாமியை ஏற்படுத்தலாம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா கூறுவதும் புறமொதுக்கத் தக்கதல்ல.

இரண்டும் நடக்கக்கூடியவை என்கின்றன கொழும்பு பாதுகாப்பு மற்றும் அரசியல் வட்டாரங்கள்.

வரும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்றம் கூடுகின்ற போது அங்கு சுரேஷ் சலே கைது தொடர்பான விவகாரம் தூள் பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. எதிரணித் தரப்புக்கள் இவ்விவகாரத்தை ஒட்டி இனவாதத்தைக் கிளப்பக்கூடும்.

ஆனாலும் கூட, விவகாரம் விசாரணை மட்டத்தில் இருப்பதால் இந்தக் கைதின் பின்னணியில் இருக்கும் உள்விடயங்களை நாடாளுமன்ற விவாதத்தில் அரசுத் தரப்பு இப்போதைக்கு வெளியிடும் என்று எதிர்பார்ப்பதற்கு இடமில்லை.

இந்தக் கைதுக்கான ஆதாரங்கள், சான்றுகள், சாட்சியங்கள் போதுமான அளவில் இருக்கின்றன என்ற கருத்தை மாத்திரமே நாடாளுமன்ற விவாதத்தின் போது இப்போதைய நிலையில் ஆளுந்தரப்பு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுரேஷ் சலே கைதை அடுத்து உடனடியாகப் பிரதிபலிப்பை வெளியிட்ட எதிரணி பிரமுகர்களில் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியும் ஒருவர். சலேவுக்காக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு உட்பட

ஏனைய சட்ட விடயங்களைக் கையாள்வதற்கு ஓர் உயர்மட்ட சட்டத்தரணி குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி தெரிவித்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை வைத்து, அதையே அப்பாவி மக்கள் மீது ஏவிவிட்ட தரப்புகள், இப்போது அந்தக் சட்டத்தின் கொடூரப் பக்கங்களை - அவற்றின் விளைவுகளை - எதிர்கொள்ளும் நிலைமை வந்திருக்கின்றது.

அரசுக்கு எதிரான அரசியல் நெருக்கடிகள், ஊழல் குற்றச்சாட்டுகள், நாட்டில் வறுமை நிலை தீவிரம் போன்றவை களத்தில் மோசமான நிலைமையை ஏற்படுத்தலாம் எனக் கருதி மக்களின் கவனத்தை அவற்றிலிருந்து திசை திருப்புவதற்காகவே இத்தகைய உயர்மட்ட கைது நாடகத்தை அரசாங்கம் அரங்கேற்றுகின்றது என்றும் சில தரப்புக்கள் விளக்கம் கூற முற்படுகின்றன.

போதிய சான்றாதாரங்கள், ஆவணங்கள், சாட்சிகள் கிடைப்பதற்காகப் புலனாய்வாளர்கள் காத்திருந்தனர்

என்றும், தமக்குத் தேவையான விடயங்களை சுவீகரித்துக் கொண்ட பின்னரே இந்த கைது நடவடிக்கையை சம்பந்தப்பட்ட புலனாய்வாளர்கள் முன்னெடுத்தனர் என்றும் கொழும்பு வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

பிள்ளையானின் உதவியாளராக இருந்த அன்சீர் சாஹிர் மௌலானா மேற்கு நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்த

நிலையில் வெளிப்படுத்திய உள்வீட்டு உண்மைகளே நாட்டின் புலனாய்வுத்துறைத் தலைவர் வரை உள்ள மட்டங்களைக் கைது செய்து, விசாரணை செய்து, நடவடிக்கை மேற்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கின என்பதை மறந்து விடக்கூடாது.

பிள்ளையான் பக்கத்தில் உள்ள தரப்புகள் அரசு சாட்சிகளாக மாறக்கூடிய சாத்தியங்களையும் வைத்துக் கொண்டுதான் இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டு இருக்கும் என்று பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் யூகம் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கைதின் பின்னால் உள்ள பல விடயங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை தென்னிலங்கை ஊடகங்களில் மின்னும் என்றும் எதிர்பார்க்கலாம்.