சிக்கலில் சிறிதரன்!

சிக்கலில் சிறிதரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மிக நெருக்கடியான அரசியல் சிக்கல்களை எதிர்கொள்கின்றார். கட்சிக்குள் அவருக்கு எதிராகக் கிளம்பி இருக்கும் கருத்து நிலைப்பாடு ஒருபுறம். தென்னிலங்கையில் அவர் அரசுடன் சேர்ந்து செயல்படுகின்றார் என்ற கருத்தியலில் கிளம்பி இருக்கும் ஒரு குழுவின் எதிர்ப்பு மறுபுறம்.

இந்த இரண்டையும் அவர் ஒரே சமயத்தில் எதிர்கொள்வது என்பது மிக சிக்கலானதுதான். பல சமயங்களிலும் சிந்திக்கும்போது அவர் குறித்து பச்சாதாபமே ஏற்படுகின்றது.

'பட்ட காலிலே படும்' என்ற கதையாக அவருக்குத் தொடர்ந்து தொல்லைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் முறைப்பாட்டு ஆணையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்த சஞ்சய் மாவத்த என்ற நபர் நேற்றும் இன்னொரு முறைப்பாட்டைச் செய்தமை மாத்திரமல்லாமல், பகிரங்க ஊடக மாநாடு ஒன்றையும் நடத்தி, சில அறிவிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார்.

ரணில் ஆட்சி காலத்தில் பார் பெர்மிட் பெற்றமை, வன்னியில் காணி ஒதுக்கீட்டுக்கு லஞ்சம் வாங்கியமை, முறையற்ற விதத்தில் சொத்துச் சேர்த்தமை என்று மூன்று அடிப்படையிலான குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து சிறிதரனுக்கு எதிராக முன்வைத்து வருகிறார். இப்போதும் புதிதாக இவ்விடயத்தில் ஆதாரங்களை லஞ்ச,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குத் தான் கையளித்திருக்கின்றார் என்று அவர் நேற்றுத் தாம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்திருக்கிறார்.

தொடர்ந்து சிறிதரனக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தாலும், அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவோ, அந்தக் குற்றச்சாட்டுகள் விடயத்தில் காத்திரமான நகர்வுக்கு வழி இருப்பதாகவோ லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அசமாத்தம் கூடக் காட்டவில்லை.

இந்தப் பின்புலத்தில்தான் அரசமைப்புக் கவுன்ஸில் மற்றும் விடயங்களில் சிறிதரன், ஆளும் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார் என்று உள்கட்சி மோதலில் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் குற்றம் சுமத்துகின்றன.

சிறிதரனின் இந்த நடவடிக்கையையும் அவருக்கு எதிரான லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படாதமையையும் முடிச்சு போட்டு அவரது அரசியல் எதிர்தரப்பினர் பரந்த அளவில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் சிறிதரன் என்ன சமாதானம் சொன்னாலும் - தன்னுடைய கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக எத்தகைய பிரசாரத்தை முன்னெடுத்தாலும் - இவை தொடர்பில் தம்மை ஆளுமையாக நிலை நிறுத்த வேண்டுமானால் அவர் ஒரு விடயத்தை தெளிவாகவும் வெளிப்படையாகவும் செய்தாக வேண்டும்.

வெறுமனே அரசுக்கு எதிராக - தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக - நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ வாய்ச்சவடால் பேச்சு பேசுவதில் அர்த்தமில்லை.

அரசமைப்பு கவுன்ஸிலிலும் வெளியிலும் அரசுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார், அவருக்கு எதிரான பல பிடிகள் ஆளும் தரப்பிடம் இருப்பதால் ஆளும் தரப்புக்கு அவர் வளைந்து கொடுக்கிறார், மசிந்து செயல்படுகிறார் என்றெல்லாம் அவரது அரசியல் எதிரிகள் முன்வைக்கும் பிரசாரத்திற்கு எதிராகக் காத்திரமான அரசு எதிர்ப்பு செயற்பாடுகளை அவர் நடைமுறையில் செய்து காட்ட வேண்டும்.

அதைச் செய்தால் மாத்திரமே இப்போதுள்ள நிலையில் அவர் அரசியலில் மீண்டெழ முடியும். இவ்விடயத்தில் தேவைப்படுவது தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் வாய்ச்சவடால் பேச்சுக்கள் அல்ல. அரசுக்கு எதிரான - அரசை நெருக்கடியில் ஆழ்த்துகின்ற - காத்திரமான நடவடிக்கைகளை அரசமைப்புக் கவுன்ஸிலில் இருந்து

அதனை அவர் ஆரம்பிக்க வேண்டும். இந்த ஆலோசனை அவர் மீதான காழ்ப்புணர்வினால் முன்வைக்கப்பட்டது அல்ல என்பதையும், அவர் கவனத்தில் கொள்வது நல்லது.

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி